திருப்புகழில் பெருமாள் ஆ!
திருப்புகழில் பாடல்கள் அனைத்தும் பெருமாளே என்ற வார்த்தையுடன் நிறைவு பெறுவதை அனைவரும் அறிவோம். நமக்கு பெருமாளே என்றவுடன் திருமால் தான் நினைவுக்கு வருவார்.
ஆனால் விநாயகப் பெருமான் முருகப்பெருமான் சிவபெருமான் என்று சைவத்திலும் அனைத்து கடவுள்களுக்கும் பெருமான் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துவோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து பூஜைகளும் கணபதி பூஜைக்கு பின்புதான் துவங்கும் அதேபோல் திருப்புகழில் முதலில் விநாயகருக்கு துதி பாடல்களை பாடிய பின் முருகப்பெருமானின் பாடல்கள் தொடரும்.
விநாயகர் துதி
ராகம் – ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் – அங்கதாளம் – 8
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் …… தனதான தந்ததனத் தானதனத் …… தனதான உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி இன்பரசத் தேபருகிப் …… பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே தம்பிதனக் காகவனத் …… தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.
பொருள்
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப் பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.
மேலும் படிக்க : வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்..!