உக்ரைன் நகரங்களில் குண்டுமழை..!! மெட்ரோ சுரங்கங்களில் தஞ்சமடையும் மக்கள்..!!
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புப் படைகள் குண்டுமழை பொழிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கவில்லை என ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய படைகள் முழு வீச்சில் தாக்குதல் தொடுத்து வருகின்றன. இந்நிலையில், உயர் துல்லியமான ஆயுதங்களை கொண்டு உக்ரைனின் ராணுவ மற்றும் விமான தளங்களை ரஷ்யா தாக்கி வருகிறது.
தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை எனவும் உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடந்து வருகிறது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே ரஷ்யாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க மேற்குலக நாடுகள் ஆலோசித்து வருகின்றன.