பட்டையைக் கிளப்பிய பெண்குயின் திரைப்படத்தின் விமர்சனம்
பட்டையை கிளப்பியது பெண்குயின்!
கீர்த்தி சுரேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடிக்கும் இரண்டாவது படம் பென்குயின். நடிகையர் திலகம் படத்தின் மூலம் நம் மனதில் சாவித்திரி அம்மாவாக இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது ரிதம் என்னும் அம்மா கதாபாத்திரத்தில் நம்முள் ஒருவராக வாழ்ந்துள்ளார்.
ஒரு அம்மா தன் பிள்ளைக்கு சொல்லும் கதை தற்போதைய கதை பிளாஷ்பேக் கதை என்று மூன்று கதைகள் இணைக்கும் வகையில் அருமையாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஈஸ்வர் கார்த்திக். இவரின் முதல் படம் என்று சொன்னால் நம்பமுடியாத அளவிற்கு படத்தை அருமையாக இயக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் வெளியாகிய இந்தப் படம் திரையரங்குகளில் வசூலை பிச்சி பெடலெடுத்திருக்கும்.
‘ஒவ்வொருவரின் கதையின் பின்னாலும் ஒரு தாயின் கதை இருக்கும்’ என்ற டேக் லைன் அருமை. குழந்தையைத் தொலைத்து தவிக்கும் தாயின் கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.
பூச்சிகள் அறிவின் அடையாளமாக கருதி பூச்சிகளைக் கண்டு பயப்படும் வியாதியான என்டோமோபோபியா நோய் ரிதம் கதாபாத்திரத்துக்கு இருக்க அதை மீண்டு வரும் வகையில் கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. இதனை விட கொடுமையான நோய் என்னவென்றால் அடுத்தவருடன் ஒருவரை ஒப்பிட்டுக் குத்திக்காட்டுவதே. இந்த நோயே வில்லனை உருவாக்குகிறது அல்ல அல்ல வில்லியை உருவாக்கியுள்ளது.
பெண் குயின் படத்தின் காஸ்டிங் அருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களது பாணியை செம்மையாக செய்துள்ளனர். எதிர்பாராத வகையில் ஒரு கதாநாயகி ஒரு வில்லி ஒரு வில்லன் என்று கதை சுவாரஸ்யமாக நகர்கிறது.
பெண்குயின் திரைப்படத்தில் உடல் உறுப்புகள் திருட்டு, குழந்தைகள் கடத்தல், கடத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் சிதைவை விட மனசிதைவு தான் அதிகம் என்று நடிக்கும் அந்த குழந்தையின் கதாபாத்திரத்திற்கு ஒரு தனி பாராட்டு அவசியம்.
ரிதம் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட அருமையாக நடித்திருக்கிறது. திரைப்படக் குழுவின் கைவண்ணம் அந்த இடத்தில் வெகுவிமர்சையாக தெரிகிறது.
கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இவர்களிடம் நான்கு அரை மணிநேரம் கூறியுள்ளதாக ஒரு பேட்டி அளித்தார். திரைப்படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது. அந்த நான்கு அரை மணி நேரம் எவ்வளவு சுவாரஸ்யமாக இந்த கதையை கீர்த்தி சுரேஷ் கேட்டிருப்பார் என்பது. ஹேட்ஸ் ஆப்!
பிறரை ஒப்பிட்டு குத்திக்காட்ட கூடாது என்னும் கதைக்கருவை கொண்ட இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னால் பேசப்பட்ட ஒப்பீடுகளான ராட்சசன், பொன்மகள் வந்தாள் படங்களை ஒப்பிடாமல் இந்த படம் தனித்துவமாக விளங்குகிறது.
திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தாயிர்க்கும் குழந்தையைத் தொலைத்த அந்த பரிதவிப்பு மற்றும் பிரசவத்தின் போது இருக்கும் எதிர்பார்ப்பு ஆசை போன்றவற்றையெல்லாம் உணர்வுப்பூர்வமாக ரசிக்கும் வாழும் வகையில் ரிதம் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
படம் சூப்பர் டூப்பர் ஹிட். பெண்குயின் குழுவினர் அனைவருக்குமே கரகோஷம் எழுப்பி பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.