ராக்கெட் வேகத்தில் மணல் விலை:- ஓபிஎஸ் அறிக்கை
கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையைக் கட்டுப்படுத்த தி.முக. அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட் கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க ஆவன செய்யப்படும் என்று தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நியாயமான விலையில் கிடைப்பதாகத் தெரியவில்லை. மாறாக கட்டுக்கடங்காமல் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. அண்மையில் பொதுமக்கள் மற்றும் ஏழை எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமுமின்றி மணலை எடுத்துச் செல்லும் வகையில் காலை 8-00 மணி முதல் மாலை மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒரு யூனிட் மணல் 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது வெளிச் சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது ஆனால், ஒரு யூனிட் மணல் விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அதற்கான புதிய வழிகாட்டுதல் முறைகளை வகுத்தபிறகு, வெளிச் சந்தையில் 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த ஒரு யூனிட் மணல் விலை தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் சிலரால் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குவாரியிலிருந்து கட்டுமானப் பணி நடக்கும் இடம் வரையிலான போக்குவரத்துக் கட்டணம் தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என கூறப்பட்டது. ஒரு யூனிட் மணல் விலை 13,600 ரூபாய் என்பது வீடு கட்டுவோர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால் மணல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.