அடுத்த 2 வாரம்…உஷார் மக்களே….
கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 30 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இதனையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இதனையடுத்து பள்ளிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொண்டது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார செயலாளர் ராதகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோன பரவல் குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து பள்ளிகளிலும், வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். மேலும் கொரோனா குறைந்து வருவதால் அலட்சியமாக செயல்படக்கூடாது என்றும், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய கூடாது. முக கவசம் அணிவது என்பது சவாலாக இருக்கும் பட்சத்தில் தனி இடத்தில் அதை தளர்த்திக் கொள்ளலாம். அடுத்த இரண்டு வாரம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்துவிடுகிறது. தொற்று நோய் ஏற்பட்டவர்கள் 4 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். இதனால் இதே ஒத்துழைப்பை மக்கள் அரசுக்கு வழங்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.