வேப்பம் பூ சமையல் ஸ்பெசல் – 1 ..!!
காரக் குழம்பு வேப்பம் பூ வைத்து கார குழம்பு செய்யலாம். இதன் சுவையும், மணமும் அருமையாக இருக்கும். கசப்பு இல்லாததால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையானவை : காய்ந்த வேப்பம்பூ 3 ஸ்பூன் வறுத்து எடுத்து வைக்கவும். வெங்காயம் ஒரு கப் அளவிற்கு நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு 5 பல் நறுக்கியது. தக்காளி நறுக்கியது 2 புளி கரைசல் அரை கப். கறிவேப்பிலை சிறிது மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், வெந்தயம் கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் 3, சீரகம் அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் சிறிது, நல்லெண்ணெய் 2 குழிக்கரண்டி, உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்து இதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, நன்றாக வதங்கியதும் பிறகு தக்காளி, சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளி வதங்கியதும், தூள் வகைகள், ஒவ்வொன்றாக சேர்த்து அதே எண்ணெயில் வதக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சேர்த்து வதக்கி, அதனுடன் வேப்பம் பூ சேர்த்து, புளிக் கரைசல் விட்டு அதனுடன் மீத மிருக்கும் எண்ணெயும் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். வேப்பம் பூ கார குழம்பு தயார். பொரித்த அப்பளத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கறிவேப்பிலை சாதம் செய்யும் போது சிறிது வேப்பம் பூ சேர்த்துக் கொள்வதால் இதன் மணமும், சுவையும் அப்படியே இருக்கும். வேப்பம் பூ சேர்த்ததே இதில் தெரியாது. இதனால் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.
தேவையானவை: கால் கப் காய்ந்த வேப்பம் பூ, ஆற வைத்த சாதம் 2 கப், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, காய்ந்த மிளகாய் 5, இரண்டு ஸ்பூன் சீரகம், மல்லி தனியா அரை ஸ்பூன், காய்ந்த சுண்டைக் காய் பத்து, நெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை : வாணலியில் நெய் விட்டு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம், மல்லி ஆகியவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே வாணலியில், கறிவேப்பிலை, சுண்டைக் காய், வேப்பம் பூ சேர்த்து, வறுத்து எடுத்து வைக்கவும். மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலை, வேப்பம் பூ, சுண்டைக் காய் பொடி செய்து, அதிலேயே வறுத்த கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம், எள்ளு, மல்லி, உப்பு சேர்த்து கொர கொரப்பாக பொடி செய்யவும். இந்த பொடியை கலக்கி சூடாக பரிமாறவும். சுவையான கறிவேப்பிலை சாதம் தயார். இந்தப் பொடி பசியை தூண்டுவதுடன், பித்தத்தை நீக்கும்.