நவராத்திரி 9 ஆம் நாள் சரஸ்வதி பூஜை 2023 வழிபடும் முறைகள்,அதனால் கிடைக்கும் பலன்கள்
பிரதமை திதியில் தொடங்கி நவமி திதியில் முடியும் நவராத்திரி ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவாக உள்ளது. இந்த ஒன்பது நாட்களும் அம்மன் நவதுர்க்கையாகவும் பார்வதி தேவியாகவும் பல்வேறு ரூபங்களில் அவதரித்து நமக்கு பலன்களை அள்ளித் தருபவர்களாக விளங்குகிறாள். 9 நாட்களும் பெண்கள் ஒவ்வொரு நிற உடை அணிந்து அம்மனுக்கு ஒவ்வொரு நெய்வேத்தியம் படைத்து அந்த நாளுக்குரிய ராகம் பாடி, கோலம் பழங்கள் ஆகியவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக படைத்து வணங்கி வந்தனர்.
இந்த வருடம் பிரதமை திதி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி நவராத்திரியின் கடைசி நாளான 9 ஆம் நாள் நவமி திதியானது அக்டோபர் 24 ஆம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாள் கடைசி தினமாக மேலும் நவ துர்க்கைகளில் சக்தி வாய்ந்த சரஸ்வதி தேவியை நினைத்து சரஸ்வதி பூஜையாக வணங்கும் நாளாக உள்ளது. இதுவரை அம்மனை வழிபடாதவர்களும் இன்றைய நாள் வழிபட்டால் சரஸ்வதி தேவியின் முழு அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி 9 ஆம் நாள்
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியாகவும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும் , கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் அம்பாள் நமக்கு அருள் புரிகிறாள். நவராத்திரிகளில் கடைசி 9 ஆம் நாளான இன்று மகா நவராத்திரி ஆக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் வரும் நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அம்மனை சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்றும் தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். எனவே சித்திதாத்ரி என்றால் வெற்றியை தருபவள் என்று பொருள் தரும் .இன்று நாம் சரஸ்வதி தேவியை வணங்குவதால் நமக்கு வெற்றிகளை அள்ளித் தரும் நாளாக நவராத்திரி 9 ஆம் நாள் இருக்கும்.
சரஸ்வதி பூஜை 2023 வழிபடும் முறைகள்
திதி : நவமி திதி
நாள் : அக்டோபர் 24 ஆம் தேதி
கிழமை : திங்கள்கிழமை
அம்மன் : பரமேஸ்வரி அம்மன், சித்திதாத்ரி என்ற பெயரில் அம்மனை வழிபட வேண்டும்.
நிறம் : வெந்தய நிறம்
கோலம் : தாமரை வகைக் கோலம்
மலர் : தாமரை
இலை : மரிக்கொழுந்து
நெய்வேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்,சுண்டல்
பழம் : நாவல் பழம்
ராகம் : வசந்தா ராகம்
மந்திரம் : சரஸ்வதி தேவியின் பாடல்கள் லக்ஷ்மி சகஸ்ரநாமம், லஷ்மி அஷ்டோத்திரம், சரஸ்வதி தேவி நாமங்கள்
சரஸ்வதி பூஜை அன்று அம்மனை வழிபடுவதால் கல்வி மேம்படும். வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்துவிட்ட நிம்மதி உண்டாகும். சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து வாழ்வில் நாம் தொடங்கும் அனைத்து செயல்களும் நல்லதாகவே அமையும் .கல்வி சார்ந்த விஷயங்களில் நீங்கள் முன்பு இருந்ததை விட அதிக கவனம் செலுத்தி படிக்க தொடங்குவீர்கள் கல்வியால் உயரும் நிலை ஏற்படும். குடும்பத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எந்த தொழில் தொடங்க வேண்டும் என்று பல நாள் நினைத்து இருந்தீர்களோ சரஸ்வதி தேவியின் பரிபூரண அருளால் சீக்கிரம் நீங்கள் நினைத்த தொழிலை தொடங்கும் நேரம் வரும். சந்ததி வளரும் நோய்நொடி இன்றி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.