சுற்றுலா

இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தின் சிறப்புகள்!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் முற்றிலும் சூழ்ந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கண் கவர் மாவட்டம்தான் தேனி மாவட்டம்.

மனதை கொள்ளை கொள்ளும்

எங்கு பார்த்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் பச்சை பசேல் என்று இருக்கும் வயல்வெளிகளும், மாவட்டத்தை சுற்றி மலைகளும் மனதிற்கு இதமாக இருக்கின்றன. மதுரை மாவட்டத்துடன் இணைந்து இருந்த இந்த மாவட்டத்தை தனி மாவட்டமாக அரசாணை எண் 679 இல் படி 25.7.1996 அன்று ஆணை பிறப்பித்து 1.01.1997 அன்று முறையாக தேனி மாவட்டம் உருவானது.  இந்த மாவட்டத்தின் முதல் ஆட்சியாளர் என்ற பெருமையை திரு k.சத்திய கோபால் (இ.ஆ.ப) என்பவர் பெற்றார்.

தேனி மாவட்டத்தில் மொத்த பரப்பளவு 3243 ச.கி.மீ என பரந்து விரிந்துள்ளது. தேனி மாவட்டத்தின் எல்லைகளாக கிழக்கே மதுரை மாவட்டமும் மேற்கில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டமும், வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், தெற்கே விருதுநகர் மாவட்டமும் அமைந்துள்ளன. 

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், ஐந்து வட்டங்களும் உள்ளன. தேனி மாவட்டத்திற்கு உட்பட்டு ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8, ஊராட்சி ஒன்றியங்கள், 130கிராம பஞ்சாயத்துகள், 113 வருவாய் கிராமங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளான கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, ஆகியவையும் ஒரு நாடாளுமன்ற தொகுதியாக தேனி விளங்குகிறது.

இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். தமிழ்நாட்டில் விவசாயத்தில் தஞ்சைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் விளங்குகிறது. முக்கிய பயிர்களாக நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, வெற்றிலை பயிரிடப்படுகிறது. மேலும் தோட்டப்பயிர்கள் ஆக தேயிலை, கொக்கோ, திராட்சை,  காபி, ஏலக்காய், போன்றவைகளும் பயிரிடப்படுகின்றன.

இந்த மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான, பெரியாறு மற்றும் வைகை ஆறு ஆகியவை இந்த மாவட்டத்திற்கு குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஜீவாதாரமாக விளங்குகின்றது.

தொழில் வளத்தை பொருத்தவரையில் பருத்தி, நூற்பாலைகள் சர்க்கரை ஆலைகள் மற்றும் சுருளியாறு மின் திட்டங்கள், வைகை மைக்ரோ நீர்மின் நிலையம், காற்றாலை, மின் உற்பத்தி போன்ற தொழில்கள் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்கின்றன.

இம்மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் எனும் இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 46, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் 23, அரசு உயர்நிலை பள்ளிகள் 40, அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் 15 மற்றும் சுயநிதி ஆங்கில வழி கல்வி அளிக்கும் மேல்நிலைப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.

கல்லூரிகளை பொறுத்தவரையில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி, போடியில் அரசு பொறியியல் கல்லூரி, மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. விளக்கு பகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசு தொழிற்பயிற்சி மையம், மற்றும் மகளிர் தொழிற்பயிற்சி மையம் இவை தவிர சுயநிதி தொழில் பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய பொது நூலகம், 58 கிளை நூலகங்கள், 13 கிராம நூலகங்கள் மற்றும் 17 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆறுகளை மையமாக கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

1. பெரியாறு நீர் மின்சக்தி நிலையம்

2. சுருளியாறு நீர்மின்சக்தி நிலையம்

3. வைகை நுண் புனல் மின் நிலையம்

இவை தவிர தேனி, ஆண்டிபட்டி, கண்டமனூர், போடி ஆகிய பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காற்றை பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. மாவட்டத்தின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். மாவட்டத்தின் சிறப்பு மிக்க ஆலயங்கள் பற்றியும் சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *