ஹீமோகுளோபின் அதிகரிக்கனுமா மட்டன் ஈரல் வறுவல் சாப்பிடுங்க
நாம் உண்ணும் இறைச்சியில் அதிக சத்துக்களை கொண்டது மட்டன் ஈரல். காப்பர், மினரல்ஸ், போலிக் ஆசிட், விட்டமின் கே, பி, ஏ, டி, பி12 சேமித்து வைத்துக் கொள்கிறது. ஈரலில் சிறப்பு வாய்ந்த ரத்தநாளம் உள்ளது. இவை கல்லீரல் சிரை என்று அழைப்பார்கள். இதை இதயத்தில் இருந்து நேரடியாக வரவில்லை என்றாலும் ரத்தத்தை மண்ணீரல், குடல், வயிறு போன்றவற்றிற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
உடம்பில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது. வாரம் ஒருமுறை ஈரலை சாப்பிட்டு வருவதன் மூலம் அனிமியா வருமுன் தடுக்க முடியும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கண்பார்வைக்கு உதவுகிறது. ஆண்-பெண் உயிரணு வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடலில் ரத்தம் கம்மியாக இருப்பவர்கள் இதைத் தொடர்ந்து உண்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. ரத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் இதை தொடர்ந்து உண்ணுவதால் ரத்தம் அதிகரிக்கும். மட்டன் ஈரல் வறுவல், ஈரல் பெப்பர் ஃப்ரை, ஈரல் கிரேவி என்று விதவிதமாக சமைத்து உண்ணலாம்.
மட்டன் ஈரல் வறுவல்
தேவையான பொருட்கள் : ஈரல் கால் கிலோ, வெங்காயம் 1, தக்காளி 1, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், தனியா தூள் ஒரு ஸ்பூன், மிளகுத் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், பட்டை ஒரு துண்டு, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 5 பல், கொத்த மல்லி சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
ஒரு பாத்திரத்தில் ஈரலை கழுவி சுத்தம் செய்து இதனுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தற்போது தக்காளி சேர்த்து வதக்கியதும் இதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், கறி மசாலா, உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறி வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.