பல்லடத்தில் முத்துக்குமார சுவாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா !!
பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெற்ற அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா-அரோகரா கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் .
முத்துக்குமாரசுவாமி திருக்கோவில்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர், முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.மிகவும் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலானது 16 ஆண்டுகளுக்குப் பிறகு புரனமைப்பு செய்யப்பட்டது. கடந்த பத்தாம் தேதி திருக்கோவிலுக்கு தீர்த்த குடங்கள்,முளைப்பாலிகை எடுத்துவரப்பட்டு ஐம்பூத வழிபாட்டுடன் ஆறு கால வேள்வி பூஜைகள் தொடங்கியது.
கோலாகலமாக நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு பெருவிழா
அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு மகிமாலீஸ்வரர், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி, முத்து விநாயகர் மற்றும் நவ நாயகர்களின் கோபுரங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக் குழு உறுப்பினர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமர குருபர சுவாமிகள் ஆகியோர் தலைமையில் திருநெறிய தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
ஆறு கால வேள்வி வழிபாட்டுக்கு பின் புனித தீர்த்த குடங்கள் மங்கள இசையுடன் திருக்கோவிலை வலம் வந்து பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களுக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சிவாச்சாரியார்கள் திருக்குட நன்னீராடல் செய்தனர்.
கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்
இத்திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை காண திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.திருக்குட நன்னீராட்டு விழா முடிந்ததும் பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. மேலும் மூலவர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழா விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.