தாயின் அன்பிற்கு ஈடிணை எதுவுமில்லை…!
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தாய் பூனை ஒன்று தனது குட்டியை மருத்துவமனைக்கு கவ்விக் கொண்டு வந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தாயின் பாசத்திற்கு இந்த உலகத்தில் ஈடு இணை இல்லை என்று சொல்வார்கள். தனது குழந்தையை ஆபத்தில் பார்க்கும்போது அதன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு தாய் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். இது மனித சமூகத்திற்கு மட்டுமில்லை எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.
ஒரு தாய் பூனை தனது பூனைக்குட்டிக்கு நோய் ஏற்பட்ட போது, என்ன செய்திருக்கிறது தெரியுமா?
உடல்நிலை சரியில்லாத தனது குட்டியை வாயில் கவ்விக் கொண்டு நேராக மருத்துவமனைக்குச் சென்று உள்ளது. ஆச்சரியப்படுகிறீர்களா? அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவர்களுக்கும் இதே ஆச்சரியம்தான். மருத்துவமனைக்கு வந்த அந்த பூனையை மருத்துவர்கள் பாதுகாப்பாக அழைத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் முதலில் பகிர்ந்தார்அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர். மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டிலிருந்து ஒரு பூனை தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு எமர்ஜென்சி அறைக்குள் வந்தது என்று எழுதியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பூனையைச் சுற்றி நிறைய மருத்துவர்கள் உள்ளனர். மேலும் மிகவும் பாசமாக அதனை அழைக்கின்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது. பூனைக்குட்டிக்கு உதவ மருத்துவர்கள் விரைந்தபோது தாய் தனது குட்டியை தன் பிடியை விட்டு கீழே விடவில்லையாம். மருத்துவர்கள் பூனைக்குட்டியை கவனித்துக் கொள்வதற்காக தாய்க்கு பால் மற்றும் உணவையும் கொடுத்தனர். அதன் பின்னர் இரண்டு பூனைகளும் ஒரு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மேலும் குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த புகைப்படங்கள் 82 ஆயிரத்து மேற்பட்ட லைக்குகளையும் 4 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளன.