செய்திகள்தமிழகம்

தேர்தல் தோல்வியால் விரக்தி..!! தூக்கிட்டு தற்கொலை செய்த ம.நீ.ம. வேட்பாளர்..!!

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிள்ளது.

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வரும் மணி(55) என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுப்பாத்தாள்(50). மணி மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் நடந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டார்.

மேலும் தேர்தல் செலவுக்காக அக்கம் பக்கத்தில் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளார். அந்த பகுதியில் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும் அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது, மக்கள் நீதி மையம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்த மணிக்கு, வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் செலவுக்காக அக்கம்பக்கத்தினரிடம் வாங்கிய கடன் தொகை ரூ.50 ஆயிரத்தை எப்படித் திருப்பி தருவது என தெரியாமலும் இருந்துள்ளார்.

இதன் காரணமாக கணவன் மனைவி இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மணி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *