செய்திகள்தமிழகம்

மயிலாடுதுறையில் கள்ள ஓட்டு..! போராடி மாற்று ஓட்டு செலுத்திய பெண்..!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், மயிலாடுதுறை அருகே ஒரு பெண்ணின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. இதில் மயிலாடுதுறை நகராட்சியில் மட்டும் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன.

அதில், 10வது வார்டுக்கு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வாக்கச்சாவடி எண் 12ல் ஈ.வே.ரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி செல்வி என்ற பெண் வாக்களிக்க சென்றுள்ளார்.

ஆனால், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், தான் வாக்களிக்க வில்லை என அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறிய நிலையில், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் ஸ்லிப்பில் பிரிண்ட் சரியாக இல்லை என்றும், முகக்கவசம் அணிந்து வருவதால் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு விளக்கமளித்தனர். அந்த பெண் வாக்கு செலுத்தியே ஆக வேண்டும் என நீண்ட போராட்டம் நடத்திய பின்னர், அந்தப் பெண்ணுக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது.

இதனால் அந்த வாக்குச் சாவடியில் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *