மலாய் பன்னீர் கிரேவி
நாம் அன்றாட உணவுகளில் கால்சியம் சத்தை பெற முடியாவிட்டாலும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. சிலருக்கு பன்னீர் சாப்பிட பிடிக்காது.
அவர்களுக்கும் இந்த பன்னீரை வைத்து முக்கியமாக மலாய் பன்னீர் கிரேவி செய்து கொடுத்தாள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் கலக்கலாக இருக்கும். வேண்டாம் என்பவர்களும் இதை விரும்பி உண்ண செய்வார்கள் சப்பாத்தி செய்து இந்த கிரேவியை சைடிஸ் ஆக கொடுக்கலாம்.
மலாய் பன்னீர் கிரேவி
தேவையான பொருட்கள் : பன்னீர் துண்டுகள் 200 கிராம், எண்ணெய் 50 மில்லி, வெங்காயம் நறுக்கியது ஒரு கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், முந்திரி, பாதாம் தலா ஒரு ஸ்பூன், மல்லித்தூள், மிளகாய்தூள் ஒரு ஸ்பூன், சீரகப் பொடி ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், கரம்மசாலா ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், க்ரீம் கால் கப், சர்க்கரை ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, உலர்ந்த வெந்தய இலைகள் ஒரு ஸ்பூன்.
செய்முறை விளக்கம் : ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் சேர்த்து பொன்னிறமாக பிரை செய்து சுடுநீரில் போட்டு நீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி இரண்டையும் மூழ்கும் அளவு சுடுநீரில் ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இவற்றை முதலில் ஊற வைத்து தயாரித்து எடுத்து வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும். பச்சை வாசனை போன பிறகு இதில் கரம் மசாலாவை தவிர மற்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் பேஸ்ட்டை சேர்த்து கிளறி சிறிது நேரம் வேக வைக்கவும். இதில் தேவையான அளவு நீர் சேர்த்து, பன்னீரையும் போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து, இறுதியில் வெங்காய கீரையை கையால் நசுக்கி போட்டு, கரம் மசாலாவை சேர்த்து கிளறி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கடைசியாக கிரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மலாய் பன்னீர் கிரேவி ரெடி.
குறிப்பு : பன்னீர் கிரேவி செய்வதற்கு ஒரு நான்ஸ்டிக் வாணலியை உபயோகப்படுத்தலாம். இதனால் எண்ணெய் அதிகம் செலவாகாது. பன்னீர் பொரிக்கும் போது அடி பிடிக்காது. இந்த கிரேவியை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். இந்த கிரேவி செய்வது ஈஸியாக இருக்கும். தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொண்டால் அரை மணி நேரத்திற்குள் செய்து விடலாம்.