நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம்
கணபதி பப்பா மோரியா!
ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாக விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் வெகு விமர்சையாக நடக்கும் விநாயக சதுர்த்திக்கு தேசமே காத்திருக்கும். வடமாநிலங்களில் இதைப் பிரசித்தியாக பேசினாலும் தென்மாநிலங்களில் அதற்கு சமமாக பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுகின்றன.
சதுர்த்தி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமிலிருந்து வரும் நான்காவது நாள். கணபதி ஹோமங்கள் செய்ய உகந்த நாளாக சதுர்த்தி கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி விரதமாக கடைப்பிடிப்பர்.

விநாயகர் சதுர்த்தி வளர்பிறைச் சதுர்த்தியில் கொண்டாடப்படுவதோடு மஹா சங்கடஹர சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு பதினைந்து நாட்கள் முன்பு வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தி.
விக்னங்களை தகர்ப்பவர் விக்னேஸ்வரர்.
சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி.
சங்கடம் என்ற சொல்லுக்கு துன்பம் இன்னல் போன்ற துக்ககரமான விஷயங்களை குறிக்கும். ஹர என்ற சொல்லுக்கு அறுக்கப்படும் விலகும் என்று நிவர்த்தி பொருளை அளிக்கும். இவ்வாறு பொருள் கொடுக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்களுக்கு அனைத்து இன்னல்களும் நீங்கும்.

இந்த வருடம் 22 ஆகஸ்ட் 2020 விநாயக சதுர்த்தி வருகிறது அதற்கு 15 நாட்களுக்கு முன்பாக 7 ஆகஸ்ட் 2020 அதாவது நாளை மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது விசேஷம்.
விரதமுறை
வருடம் முழுவதும் அனைத்து சங்கடஹர சதுர்த்தியிலும் விரதம் மேற்கொள்பவர்கள் மஹா சங்கடஹர சதுர்த்தியையே முதலாகக் கொண்டு ஆண்டிற்கு 13 சங்கடஹர சதுர்த்திக்கு விரதம் இருப்பர்.
அனைத்து விரதங்களுக்கும் அடிப்படையான சுத்தத்தை காக்க வேண்டும். உடல் வீடு மனம் என அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
இறை வழிபாடு எந்த இடத்திலிருந்து செய்தாலும் ஆத்மார்த்தமாக அர்ப்பணிப்பு செய்வது முக்கியம். கோவிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் வீட்டில் பூஜை செய்வதைவிட மனமார முழுமனதுடன் பூஜையை மேற்கொள்வதால் வீட்டிற்கு கோவிலை அழைத்து வரலாம். இறைவனின் சக்தி அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். விநாயகருக்கு சிறப்பான அருகம்புல் மற்றும் எருக்கம் பூவை பூஜைக்கு சேர்த்துக்கொள்ளவும். விநாயகருக்கு அருகம்புல் மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

முழுநாளும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை முடித்து பிடி கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து அதனை உணவாக உண்பார்கள்.
விளக்கேற்றும் முறை
மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று 13 அகல்களுடன் துவங்கி அந்த ஆண்டின் கடைசி சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு விளக்கை ஏற்றி வர விளக்கின் எண்ணிக்கை குறையக் குறைய நமது சங்கடங்களும் குறைந்து வருகிறது என்ற தாத்பர்யத்துடன் இதனை மேற்கொள்கிறோம்.

இதனை கோவிலுக்கு சென்று மேற்கொள்ளும் பக்தர்கள் தற்போது இருக்கும் சூழலில் வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம்.
அனைவரும் விநாயகரின் அருளைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.