வரம் தரும் மார்கழி முதல் நாள்,திருப்பாவை பாடல் 1 பாடலும் விளக்கமும்
மார்கழி மாதம் தொடங்கிய நாளில் இருந்து அனைவரும் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போட்டு பெருமாளை தரிசிக்க அருகில் உள்ள கோவில்களுக்கு செல்வர்.அவ்வாறு வணங்கும் பெண்கள் ஆண்டாள் நாச்சியார் பெருமாளை நினைத்துப் பாடிய மகத்துவம் நிறைந்த திருப்பாவை பாடல்களைப் பாடி வணங்கினால் பெருமாளின் முழு அருளும் கிடைக்கும்.
திருப்பாவை பாடல் -01
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்
மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருக்கும் பெண்களை எழுப்பும் போது கண்ணனின் அழகை பாடுகின்றனர் கோபியர்கள். மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள்.
இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற வீரம் நிறைந்த மகன்.தாமரை போன்ற அழகிய கண்களையும், சூரியன் போன்ற பிரகாசமான ஒளியையும் உடைய கருணை குணம் கொண்ட கண்ணன் நமக்கு அருள் புரிவதற்கு காத்துக் கொண்டு உள்ளார் என கூறுகின்றனர்.