ஊரடங்கு நேரத்தில் உருப்படியான மாஸ்க் தயாரிப்பு
வெட்டி நேரத்தை வீணாக்காமல் வெட்டிவேர் மாஸ்க் தயாரித்துள்ளனர்
வியாபாரம் வருமானம் இல்லாமல் இந்த சமயத்தில் பிரேன்ஸ்டார்மிங் என்று சொல்லப்படும் புது புது ஐடியாக்களை உருவாக்கும் காலமாக இந்த கொரோனா தனிமைப்படுத்தப்படும் காலம் அமைகிறது.
சமீபத்தில் நாமக்கல் மக்கள் புது விதமாக முக கவசத்தை உருவாக்கி அசத்தினர். அவர்களுக்குப் போட்டியாக தற்போது புதுச்சேரியை அடுத்த கோட்டக்குப்பம் என்னும் பகுதியில் சிறு தொழில் செய்யும் மக்கள் ‘வெட்டிவேர் முகமூடியை’ தயாரித்து பிரமிக்க படுத்தியுள்ளனர்.
அந்தக்கால ஞாபகம்:
அந்த காலத்தில் வீடுகளில் சூரியனின் வெப்பத்துடன் போட்டியிட வெட்டிவேர் பாயை தண்ணீரில் நனைத்து ஜன்னல்களில் போடுவது வழக்கம். அப்பொழுது ஜில்லென்ற காற்றுடன் நறுமணம் வீச கூடியதாக அந்த சூழல் அமையும். வெயிலின் தாக்கம் வீட்டினுள் அதிகம் தெரியாது.
குழந்தைகளாக இருப்பின் அதன் பக்கத்தில் இருந்து மழை வருவது போல் மனசை பரவசமடையச் செய்யலாம்.
வெட்டிவேரின் பயன்பாடு:
வெட்டி என்னும் ஒரு வகையான புல்லின் வேர்ப்பகுதியே வெட்டிவேர் எனப்படுகிறது. இறைவனுக்கு சாத்தப்படும் இந்த வெட்டி வேருக்கு பல பயன்கள் உண்டு. விவசாய நிலங்களில் மண் அரிப்பை தடுக்கும். காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் சூட்டினால் ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் பல உஷ்ண நோய்கள் என பல மருத்துவ குணங்கள் கொண்டது.
என்ன ஆச்சரியம்! இந்த வேரை தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டால் அந்தத் தண்ணீர் மருத்துவ குடி நீராக மாறுகிறது.
முக கவசம் தயாரிப்பு:
கோட்டக்குப்பம் மக்கள் சாதாரண துணி முகமூடிகளில் வெட்டி வேருடன் இதனை தயாரிக்கின்றனர். இரண்டு அடுக்குடன் இருக்கும் முக கவசத்தின் நடுவே வெட்டி வேர்களை இட்டு தைக்கின்றனர்.
எந்த வித வண்ணமுமின்றி வெள்ளை நிற முக கவசத்தை உருவாக்குகின்றனர் இம்மக்கள். காற்றை இதன் வழியாக சுவாசிக்கும் பொழுது வெட்டிவேரின் நறுமணத்துடன் வடிகட்டப்பட்ட சுத்தமான காற்றாக அமைகிறது.
கோவில்கள் செயல்படாத இந்த நேரத்தில் வெட்டிவேர் விவசாயிகளுக்கு ஒரு வரும்படியாக அமைகிறது.
இதனை யோசித்த அந்த நபருக்கு ஒரு சல்யூட்டை போட்டுட்டு எல்லாரும் போய் வாங்கலாமா!!!