நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மெகா வெற்றி..? எச்.ராஜா நம்பிக்கை..!!
தமிழகத்தில் இன்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மிக அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெறும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆங்காங்கு சில சலசலப்புக்கு மத்தியில் பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு அரசு பணம் இல்லாமல் திவாலாகி உள்ளது. திமுகவினர் பல்வேறு இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவி நிறத்தில் முகக்கவசம் அணிந்து வந்தால் தேர்தல் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த முறை நகர்ப்புற தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பாஜகவிற்கு அதிகளவிலான இடங்கள் கிடைக்கும்.” எனக் கூறினார்.