ஆரோக்கியம்குழந்தைகள் நலன்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

குழந்தைகள் கூட விரும்பும் பரங்கிக்காய் அடை எப்படி செய்வது பார்க்கலாம்…

நாம் உண்ணும் உணவே மருந்து என்று நாம் முன்னோர்கள் கூறி கேட்டிருப்போம். ஆனால் இப்பொழுது நாம் உண்ணும் உணவே நோய் வர காரணமாக உள்ளது. ஏனெனில் இப்பொழுது நாம் வாங்கி விரும்பி சாப்பிடும் பாஸ்ட்புட் உணவுகள் நம் உடலுக்கு தீங்கை மட்டுமே விளைவிக்கிறது.ருசிக்காக நாம் தேடி உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கு விளைவாக வந்து நிற்கிறது. இப்பொழுது சில பேர் கடைகளுக்கு சென்று சாப்பிடுவதைவிட மாலை நேரத்தில் குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு நொறுக்குத்தீனி சாப்பிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.

இப்படி நீங்கள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியும் ஆரோக்கியமாக இருந்தால் எப்படி இருக்கும். மாலை நேரத்தில் சுடசுட பரங்கிக்காயில் அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..இந்த ரெசிபி மிக வித்தியாசமாகவும் , ஆரோக்கிய ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும். பொதுவாக நமது வீட்டில் பரங்கிக்காய் சுரைக்காய் என்றால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட முகத்தை சுழிப்பார்கள்.ஆனால் இந்த முறையில் ஸ்நேக்ஸ் மாறி செய்து கொடுத்துப் பாருங்கள் அவர்களே வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு சத்தான உணவை கொடுத்த மகிழ்ச்சியும் அவர்களுக்கு வித்தியாசமான டேஸ்ட்டில் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட ஆனந்தமும் இருக்கும்.

பரங்கிக்காய் அடை செய்முறை

அரை கப் சிவப்பரிசி, அரை கப் அளவு இட்லி அரிசி,கால் கப் துவரம்பருப்பு , கால் கப் கடலைப்பருப்பு, கால் கப் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தூய தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு ஊற வைக்க வேண்டும். ஊறவைக்கும் பொழுது அதனுடன் ஐந்து அல்லது ஆறு வரமிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பருப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவு சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கொரகொரப்பான பக்குவத்தில் அரைத்தவுடன் அதனுடன் துருவிய பரங்கிக்காய் அரை கப் மற்றும் துருவிய சுரைக்காய் அரை கப் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் அரைத்து எடுத்த மாவில் துருவிய இஞ்சி சிறிதளவு மற்றும் துருவிய தேங்காய் சிறிதளவு கொத்தமல்லி இலை ,கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது நாம் அடை செய்வதற்கு தேவையான மாவு ரெடியாகிவிட்டது.

அரைத்து எடுத்த மாவை கையில் சிறிது எண்ணெய் தேய்த்துக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை அடை போல் தட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு தோசை கல்லை வைத்து தோசை கல் சூடானதும் தட்டிய அடையை போட்டு சுற்றிவர நன்கு எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். அடுப்பை மிதமான பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் திருப்பி எடுத்த பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் பேப்பர் விரித்து அதன் மேல் அடைகளை போட்டுக் கொள்ளவும்.

அவ்வளவுதான் சூடான மிக மிக ஆரோக்கியமான பரங்கிக்காய் அடை தயாராகிவிட்டது. இதனை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள் வித்தியாசமான டெஸடில் சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லி ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *