செய்திகள்தமிழகம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்..!! அரசு அதிரடி நடவடிக்கை..!!

தமிழக அரசுக்கு சொந்தமான திறந்தவெளி சிறை இடத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் உள்ள கட்டிடங்களை நான்கு வாரத்திற்குள் அகற்றுமாறு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பல்கலைக்கழகத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமலை சமுத்திரத்தில் பிரபல தனியார் பல்கலைக்கழகமான சாஸ்திரா பல்கலைக்கழகம் தமிழக அரசின் திறந்தவெளிச் சிறைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது தெரியவந்தது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த 2018 அக்டோபர் 3ஆம் தேதியுடன் இதை அகற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது. அப்போது வட்டாட்சியர் அருணகிரி பல்கலைக்கழகத்திற்கு சென்று அளவிடும் பணியைத் தொடங்கினார்.

பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து முன்னால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதிடம் மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் இதுபோன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் கல்வி பாதிக்கப்படும் என மனு அளித்தனர். அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.

மூன்றாண்டுகளில் அந்தக்குழு எந்த ஒரு விசாரணையையும் நடத்தாத நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு அந்தக் குழுவை கலைத்துவிட்டு தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

அக்குழு தஞ்சை சென்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து இன்று அறிக்கை தாக்கல் செய்து அதில் நான்கு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி (24.03.2022) அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இந்த நோட்டீசை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகிகளும் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *