ஞாபகசக்தி பெருக வெண்டைக்காய் பச்சடி
வெண்டைக்காயை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபகசக்தி பெருகும். வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கி னால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும்.
நம் நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் இந்த காயை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செயல்திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குவர். கணக்கில் வீக்காக இருப்பவர்கள் இதை தொடர்ந்து உண்பதால் நல்ல பலனை பெற முடியும்.
வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்பு தன்மை உள்ளதால் பலரும் இதை வெறுத்து ஒதுக்குவார்கள். வெண்டைக்காயை கழுவி நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாமல் பொடி பொடியாக நறுக்கி சிறிதுநேரம் வெறும் வாணலியில் அல்லது எண்ணெய் விட்டு வதக்கி இந்த பிசுபிசுப்பு தன்மை போய்விடும். பிறகு சமையலுக்கு உபயோகிக்கலாம்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும். வெண்டைக்காய் குழம்பு, பொரியல் அல்லது பச்சடி செய்து சாப்பிடலாம். இதனால் எலும்புகள் வலுப்படும்.
வெண்டைக்காய் பச்சடி
தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் 2, நறுக்கிய தக்காளி 2, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன், சீரகத்தூள் அரை ஸ்பூன், எண்ணெய், கடுகு தாளிக்க தேவையான அளவு, உப்பு தேவைக்கு ஏற்ப, கறிவேப்பிலை சிறிதளவு, தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் கால் கப்.
செய்முறை விளக்கம் : வெண்டைக்காய் தக்காளி பச்சடி செய்வதற்கு முதலில் வெண்டைக்காயை துடைத்து வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் லேசாக எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும். இதில் உள்ள பிசுபிசுப்பு தன்மை மாறுவதற்காக இவ்வாறு செய்து கொள்ள வேண்டும்.
வெண்டைக்காயை வதக்கி எடுத்த பிறகு, அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கிய பிறகு தக்காளியை போட்டு நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.
இதனுடன் வதக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் உப்பு சேர்த்து 2 பிரட்டு பிரட்டி பச்சை வாசனை போனதும் பச்சடி தேவையான சிறிது நீர் ஊற்றி பத்து நிமிடம் வேக விடவும்.
வெண்டைக்காய் வெந்த உடன் சிறிதளவு தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி விடவும். தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும். வெண்டைக்காய் பச்சடி சூப்பராக தயாராகி விட்டது. குழந்தைகளும் விரும்பி உண்ணுவார்கள்.