கிருஷ்ண பரமாத்மாவை வழிபடும் முறைகள்
கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில், நடுஇரவில் ரோகிணி நட்சத்திரத்தில், வ்ருஷப ராசியில் பிறந்தார். கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. மீதி நாட்களை காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலை கொண்டிருப்பதால் ‘ஓம் நமோ’ பகவதே வாசுதேவாய. என்ற நாம ஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனை கொடுக்கும்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு மோதிரவிரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ண கமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணம் செய்யலாம். அவ்வாறு அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கி இருக்க வேண்டும்.
பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாளா, ஆம்பர் போன்ற வாசனை கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும். வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கையில் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
வீட்டிற்கு வரும் கண்ணனை பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
வீட்டில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்கிறார்கள். வீட்டில் பூஜையும், நைவேத்தியமும் செய்து முடித்த பிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. கோ என்ற வடமொழி சொல்லுக்கு பசு என்று பொருள்.
உண்மையில் எல்லா ஜீவராசிகளும் பசுக் கூட்டமே. இவற்றைப் பறி பாலிப்பதால் கிருஷ்ணனுக்கு கோபாலன் என்ற பெயர் வந்தது. கண்ணனின் மாடு மேய்த்தல் என்ற திருவிளையாடலில் உட்பொருள் இதுவே. மனம் என்பது காடு. இதில் தீயகுணங்கள் என்ற கொடூர மிருகங்கள் நடமாடுகின்றன. இந்த உள்ளத்தில் கிருஷ்ணன் புகுந்துவிட்டால் அந்த மனம் பிருந்தா வனம் ஆகிவிடும்.
தீயகுணங்கள் நற்பண்புகள் எனும் பூக்களாகவும், துளசி தளங்களாகவும் மாறும். அதை வனமாலி எனப்படும் வாசுதேவன் ஏற்று மகிழ்வார். எனவே இந்த கிருஷ்ண ஜெயந்தியை கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலேயே சிறப்பாக பூஜை செய்து கிருஷ்ணரின் அருளைப் பெற வேண்டுகிறோம்.