விதியை பற்றிய புரிதல்
மில்லியன் டாலர் கேள்வி:
மில்லியல் டாலர் கேள்விகள் என்று சில கேள்விகள் உண்டு. உதாரணமாக, தாயா? தாரமா? , கடவுள் இருக்கிறாரா இல்லையா? , உலகம் அழியுமா அழியாதா? போன்ற கேள்விகளுக்கு எத்தனை ஞானிகள், அறிஞர்கள் பதில் அளித்தாலும் இதுபோன்ற கேள்விகள் சமுதாயத்தில் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த மில்லியன் டாலர் கேள்விகளுள் ஒன்று தான், “விதி என்பது உண்மையா? மனித வாழ்க்கையை கர்மா தீர்மாணம் செய்யுமா?” என்பதுதான்.
மனிதன் விதிக்கு உட்பட்டவன்
இந்த சமுதாயம் எவ்வளவு சீர்திருத்த மாற்றங்களை கொண்டு வந்தாலும், அறிவியல் எல்லைகளை கண்டறிந்து இருந்தாலும், இந்த பூமியில் பிறவி எடுத்த ஒவ்வொரு உயிரினமும் விதிக்கு உட்பட்ட வாழ்க்கையையே வாழ்கிறது. இதற்கு ஆதாரம் கேட்டால், இல்லை என்று கூறும் நபர்கள் உண்டு. சிலர் உணர வேண்டும் புரிய வைக்க முடியாது என்று கூறுவதும் உண்டு.
ஆதாரம்
‘விதி’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘law’ என்பது பொருள். இயற்பியலின் ஒரு பிரபலமான விதியை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்போம்.
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு”
இதுவே நியூட்டனின் மூன்றாவது விதி. உதாரணமாக நீங்கள் குதிக்குறீர்கள். இந்த உலகத்தின் இயற்கை விதிகளின் சட்டத்தின்படி, நீங்கள் குதித்தால் ஒரு எல்லை வரை உயரமாக குதித்து, பிறகு மீண்டும் கீழே வர வேண்டும். அதே விண்வெளியில் குதித்தால் மீண்டும் கீழே இறங்க இயலாது. உங்களால் விதியை மீற முடியும் என்றால், இந்த பூமியில் குதிக்கும் போது பறந்து அப்படியே செல்லவேண்டும் அல்லவா? ஏன் கீழே இறங்கும் அந்த செயலை உங்களால் மீற இயலவில்லை?
ஏனெனில் இயற்கையின் சட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறோம் என்பதை மனிதகுளம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதற்கும் விதிக்கும் என்ன சம்பந்தம்?
இப்பொழுது எதற்கு இதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்வி எழலாம். நம் உடம்பு எப்படி இந்த பூமியின் இயற்கை சட்டங்களுக்கு ஏற்றவாறு இயங்கிக்கொண்டு இருக்கிறதோ அதேபோல்தான், நம் மனம், சித்தம், ஆன்மா அனைத்தும் இந்த பூமியின் இயற்கை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இயங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த சட்டதிட்டங்களில் ஒன்றுதான் கர்மா.
இறைவனின் சித்தம்
இப்படிப்பட்ட சட்டதிட்டங்கள் இருக்கிறது என்றால், விதியை மீறவே இயலாதா என்ற கேள்வி எழலாம். இறைவன் சில விதிகளை மனிதனுக்கு அளித்ததற்கான காரணமே, அவன் எல்லையை விட்டு மீறாமல், பிறர்க்கு எந்த துன்பமும் நேராமல் முறையான ஆனந்தத்தை அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட விதியை மீற வேண்டும் என்று துடிப்போர்க்கு எவ்வித இடையூறுகளும் வராது. ஆனால் இயற்கைக்கு அதற்கான பதிலை கொடுத்தே ஆகவேண்டும். எனவே நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் விதிக்கு உட்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதையும், நம் ஆசைகளால் பிறருக்கு எவ்வகை துன்பமும் நேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.