கவிஞர் கண்ணதாசன் கவியில் கண்ணன்
#கிருஷ்ணஜெயந்தி
ஹாப்பி பர்த்டே க்ருஷ்.
பல கடவுள்கள் இருக்காங்க ஆனா பெண்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர மட்டும் பாய் ஃப்ரண்டாவும் குழந்தையும் பார்க்கறாங்க. பெண்கள் மட்டுமில்லாமல் மக்கள் எல்லாருமே தூக்கிக் கொஞ்சு கூடிய அவங்க வீட்டு பிள்ளையா புசு புசு குழந்தையாய் கிருஷ்ணர் காட்சியளிக்கிறார்.
அவரப் பத்தி தெரிஞ்சுக்க பல புராணங்கள் இருக்கு எடுத்துக்காட்டாக மகாபாரதம் பாகவதம், இருந்தாலும் எல்லா மக்களுக்கும் எளிமையா தெரிஞ்சுக்கணும்னா கவிஞர் கண்ணதாசன் பாடல பார்த்தா ரொம்ப அழகா இருக்குங்க.
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே)
ஆஹா! எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள். ஸ்ரீ கிருஷ்ணரோட பிறப்பு, வளர்ந்த பின் அரசாலுமை, திருப்பதி அவர் அருள் புரியும் வண்ணம் மற்றும் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாள் காட்சியளிக்கிறார்.
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே)
மகாபாரதத்தில் தன் சகோதரியாக கொண்ட பாஞ்சாலியின் மானத்தைக் காத்தவர் பின்பு பாரதப் போருக்காக சங்கை முழங்கினார் பாண்டவர்களுக்கு உதவி புரிந்து அவர்களது உரிமை உள்ள பங்கை திரும்ப பெற்றுத் தந்தவர். இவை அனைத்தும் சரித்திர புராண கதையாக இருந்தாலும் இன்றளவும் அனைவரும் மனதிலும் நின்று வழிகாட்டிப் அருள்புரிய கீதை எனும் அருமையான உபதேசத்தை தந்தவர்.
கீதையை படித்து அது கூறும் நன்னெறிகளை நம் வாழ்க்கையில் இணைத்து வாழ்கிறோமா! அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சவால்களுக்கு நடுவில் இறைவனை நினைப்பது பெரிய விஷயமாக இருக்க இதனை படித்து பின்பற்றுவது மற்றொரு சவாலாக இருக்கிறது என நினைப்பவர்களும் உண்டு. தர்ம வழியில் சென்று நல்லவராக திகழ்ந்தோமேயானால் ஸ்ரீ கிருஷ்ணரின் கீதையின்படி வாழ்க்கையை செல்ல துவங்கி விட்டோம் பின் ஸ்ரீ கிருஷ்ணரே நம்மை கீதையை படிக்க வைத்து நல்ல விதத்தில் வாழ உதவுவார்.