தொய்ந்த வாழ்க்கை பிரகாசம் ஆகனுமா?
வைகாசி மாதத்தில் வருகின்ற 13.06.20 சனிக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி. ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி அடுத்து வருகின்ற அஷ்டமி தான் தேய்பிறை அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் விசேஷமானது.
செல்வம், பணம், பதவி
இன்றைய தினத்தில் கால பைரவருக்கு விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். நம் வாழ்வில் இழந்தவற்றை பெறுவதற்கும், செல்வம், பணம், பதவி போன்றவற்றை எளிதாக இந்த விரதத்தின் மூலம் பெற முடியும். குபேரனும், மகாலட்சுமியும் இந்த விரதத்தை மேற்கொண்டு தான், தன் செல்வ வளத்தை மேம்படுத்திக் கண்டனர்.
இன்றைய தினம் கால பைரவரை வழிபடுவதால் கால பைரவரின் அருளும், குபேரன், மகா லட்சுமியின், அருளும் சேர்த்து நமக்கு கிடைக்கும். என்பதால் தான் நம் முன்னோர்கள் தவறாது ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற தேய்பிறை அஷ்டமியை வழிபட்டு வந்தனர். இந்த வழிபாட்டை தொடர்ந்து நாம் செய்ய, வாழ்வில் பல முன்னேற்றங்கள் வந்து சேரும்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
காலை எழுந்ததும் குளித்து விட்டு விரதத்தை தொடர வேண்டும். மாலை சிவன் ஆலயங்களில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இன்றைய கால கட்டத்தில் நாம் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால், வீட்டிலேயே எளிமையாக பூஜை செய்து வழிபடலாம்.
காலை ஒரு நேரம் விரதமிருந்து அன்று மாலை கால பைரவர் போட்டோ வீட்டில் வைத்திருந்தால், அந்த போட்டோவிற்கு அரளிப்பூ மாலை செலுத்தலாம். வில்வ இலை அர்ச்சனை செய்யலாம். காலபைரவர் போட்டோ இல்லை என்பவர்கள் சிவனை வழிபடலாம். அரளிப்பூ, வில்வம் இலையையும் கொண்டு சிவனுக்கு பூஜை செய்யுங்கள்.
காலபைரவர் அஷ்டகம் மந்திரத்தை பாராயணம் செய்யலாம். தயிர்சாதம், உளுந்தவடை நெய்வேதியம் படைக்கலாம். இவற்றை வைத்து தூபம், தீப ஆராதனை காட்டி வழிபடுவதால் காலபைரவரின் அருள் நமக்கு கிட்டும். இந்த பூஜையை மாலை 6 முதல் 7 மணிக்குள் முடித்து விட வேண்டும்.
பிறகு இறைவனுக்கு படைத்த பிரசாதத்தை சிறுவர்களுக்கு, பெரியவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து விட்டு நாமும் குடும்பத்துடன் உண்ணலாம். தொடர்ந்து இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மகாலட்சுமியின் பூரண அருளைப் பெறுவார்கள்.
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வதற்கு ஏற்ற வகையில் நல்ல நேரம் அமையும். இந்த தினத்தில் கால பைரவர் வாகனத்தான் ஆன தெருவில் பசியோடு இருக்கும் நாய்க்கு பிஸ்கட் வாங்கி கொடுங்கள்.