விரைவாக உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்..!! இந்திய தூதரகம் மீண்டும் அறிவுரை..!!
ரஷ்யா – உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், அந்த நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
“உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அங்கு தங்கியிருக்கும் (அவசர காரியங்கள் தவிர) அனைத்து இந்திய நாட்டவர்களும், அனைத்து இந்திய மாணவர்களும் தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய மாணவர்கள் பட்டய விமானங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு அந்தந்த மாணவர் ஒப்பந்ததாரர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என இந்திய தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக இந்தியர்களிடமிருந்து பல கேள்விகள் வந்ததன் பேரில், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய விமானங்களின் பட்டியலை தூதரகம் வெளியிட்டது. மாணவர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், விரைவாக இந்தியாவிற்கு செல்லுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
“மாணவர்கள் பீதி அடைய வேண்டாம், ஆனால் இந்தியாவிற்கு பயணிக்க கிடைக்கக்கூடிய மற்றும் வசதியான விமானங்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது, உக்ரைனியன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா, ஃப்ளை துபாய், கத்தார் ஏர்வேஸ் போன்றவை விமானங்களை இயக்குகின்றன” என்று தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா போன்றவை உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அது உறுதியளித்தது.
இந்தியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடந்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.