செய்திகள்தமிழகம்

போலி தங்கக் காசு கொடுத்து ஓட்டு சேகரிப்பு..!! அதிர்ச்சியில் வாக்காளர்கள்..!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என தெரிய வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 36வது வார்டைச் சேர்ந்த மணிமேகலை துரைப்பாண்டி என்பவர் சுயேட்சை வேட்பாளராக தென்னை மர சின்னத்தில் போட்டியிட்டார்.

இவர் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று நள்ளிரவு அவரது கணவர் துரைப்பாண்டியுடன் சேர்ந்து அந்த பகுதியில் வீடு வீடாக சென்று தங்க நாணயம் ஒன்றை வழங்கி, தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுள்ளார்.

மேலும், ஓம்சக்தி உருவம் பொறித்த அந்த தங்க நாணயத்தை, 3 நாட்கள் கழித்து பார்க்கும் படியும், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இப்போது பிரச்சினையாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சில பொதுமக்கள், மறுநாள் காலை அடகு கடைக்கு சென்று காண்பித்தபோது, அது பித்தளை என தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் பித்தளை நாணயத்தை கொடுத்து தங்களை ஏமாற்றிய சுயேட்சை வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இதே போல் பித்தளை நாணயத்தை வழங்கி மோசடி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், தனது குட்டு அம்பலமானதை அடுத்து வேட்பாளர் தலைமறைவாகி விட்டார்.

ஏற்கனவே கோவையில், திமுகவினர் போலி கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றியதாக தகவல் வெளியான நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சுயேச்சை வேட்பாளர் மக்களை இதேபோல் ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *