சகலமும் தரும் சஷ்டி விரதம் இருங்க..!!
சஷ்டி விரதம் வைகாசி மாதம் 11.6.20 வியாழக்கிழமை, தேய்பிறை சஷ்டி வருகிறது. பொதுவாக அனைவரும் சஷ்டி விரதம் இருப்போம். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு சஷ்டி வரும். பௌர்ணமி அடுத்து வரக்கூடியது தேய்பிறை சஷ்டி. அம்மாவாசை அடுத்து வரக்கூடிய சஷ்டி வளர்பிறை சஷ்டி ஆகும்.
பொதுவாக சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம். தேய்பிறை சஷ்டி ஆகவும் இருக்கலாம். வளர்பிறை சஷ்டி ஆகவும் இருக்கலாம். இதில் வளர்பிறை சஷ்டி மிகவும் விசேஷமானது. தேய்பிறை சஷ்டி முருகனை வழிபடுவதற்கு உரியது.
தேய்பிறை சஷ்டியில் முருகனுக்கு உரிய அரளி மாலை செலுத்தி, உங்களால் முடிந்த நெய் வேத்தியம் வைத்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபட அறுபடை முருகனின் அருளும் கிடைக்கும். பொதுவாக வீட்டில் வள்ளி, தெய்வானை உடன் இருக்கும் முருகப்பெருமானை மணக்கோலத்தில் வைத்து வழிபடுவது சிறப்பு.
காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த விரதத்தை மேற்கொண்டு காலை ஒரு நேரம் உணவு உண்ணாமல், விரதம் இருந்து மதியம் உணவு உண்ணலாம். மாலை முருகனுக்கு வழிபாடு செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த சஷ்டியில் முருகனுக்கு ஒரு நெய் தீபமும் அல்லது ஆறு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது.
இன்றைய சூழலில் கோவிலுக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே மிக எளிமையாக இந்த பூஜையைச் செய்யலாம். திருமணமாகாதவர்கள் திருமண வரம் வேண்டியும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவன் மனைவி ஒற்றுமைக்காக இந்த சஷ்டி விரதத்தை தொடர்ந்து உங்களால் முடிந்த அளவு அனுஷ்டிக்கலாம்.
இதனால் மயில்வாகனன் ஆகிய முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். ஒரு முறை இந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் அதன் பலனை நிச்சயம் பெற முடியும்.