இயற்கை அழகை மெருகூட்ட.. ஹெல்த்தி அழகு குறிப்புகள்!
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க கொத்தமல்லி இலை சாறு எடுத்து சமபங்கு கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து தடவி வந்தால் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். அவரை இலைச்சாற்றை உடம்பில் தழும்புகள் உள்ள இடத்தில் பூசிவர நாளடைவில் மறைந்து விடும்.
முகம் அழகாக
துத்தியிலை சாரையும், வெள்ளைப் பூண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து எடுத்து வைக்கவும். இதை முகத்தில் உள்ள பருக்கள் மீது தினமும் தடவி வர பருக்கள் குறைந்து விடும். முகம் அழகாக இருக்கும். வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து கை கால்களில் முகத்தில் பூசி காய வைத்து கழுவி வர தேவையற்ற முடி உதிர்ந்து விடும்.
தினமும் நம் அழகை பராமரிக்க 10 முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் வயதானாலும் இளமையாக இருக்கலாம். தக்காளிப்பழத்தை முகத்தில் கைகளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர மிருதுவாக இருக்கும். பயித்தம் பருப்பு மாவுடன் தர்பூசணி பழச்சாறு கலந்து முகத்தில் பூச முகம் புதுப்பொலிவு பெறும்.
முகம் பொலிவு
முல்தானி மெட்டி, வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி பேக் போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும். குளிர்சாதன பெட்டியில் ஆரஞ்சுச் சாறை குளிரூட்டி கெட்டியானதும் இந்த கட்டியை ஒரு வெள்ளை துணியில் கட்டி, கண்களின் மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
எலுமிச்சை சாறு, பப்பாளி விழுது கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும். பாலுடன் பழுத்த வாழைப்பழத்தை குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ முகம் பளபளக்கும்.