கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுபட நம் முன்னோர்களின் உணவு பழக்கத்திற்கு மாறலாமே!
இன்றைய கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்வதற்கு கீரை வகைகள், பழங்கள், சிறுதானிய வகைகள், நெல்லிக்காய், எலுமிச்சை, இஞ்சி, மிளகு, திப்பிலி, மஞ்சள் போன்ற உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் பரவி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி கிடக்கும் சூழலில் “உணவே மருந்து, மருந்தே உணவு”, என்ற மூத்தோர் மொழி ஞாபகம் வருகிறது. நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவு முறைகள் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து எவ்வித இடர்பாடுகளில் இருந்தும் மீட்டெடுக்கும் வலிமை மிக்கவை என்பதை நாம் அறிந்ததே.
ஆடாதொடை இலையை சுத்தம் செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் வேகவைத்து அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு, நாட்டு சர்க்கரை சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் அவ்வப்போது 2 ஸ்பூன் கலந்து குடித்து வருவதால், நுரையீரலின் சிற்றறைகளில் உள்ள கசடு நீக்கி ஆரோக்கியமாக வைக்க உதவும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பாசிப்பருப்பு, நெய் உப்பு சேர்த்து கூட்டாக வேகவைத்து வாரமிருமுறை அல்லது ஒருமுறை சேர்த்து வருவதால் இரும்புச்சத்து அதிகரித்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி நோய் வராமல் காக்கும்.
மேலும் பருத்திப்பால், கேழ்வரகு கூழ், கம்பங்கூழ், நெல்லிக்காய் ஜூஸ், சுண்டைக்காய் மசியல், சிவப்பு காப்பரிசி, தூதுவளை ரொட்டி, கொள்ளு சுண்டல், ஓமவல்லி பஜ்ஜி, தூதுவளை ரசம், இஞ்சி ரசம், கொள்ளு ரசம், மிளகு ரசம், சுக்கு காபி, இஞ்சி டீ, முருங்கைக்கீரை சூப்.
முள்முருங்கை தோசை, பிரண்டை குழம்பு, பானகம், மஞ்சள் பால், முடக்கத்தான் கீரை தோசை, ஆவாரம்பூ துவையல், முசுமுசுக்கை கீரை துவையல், மணத்தக்காளி கீரை சூப், கோவை கீரை பொரியல், பிரண்டை துவையல், வேப்பம்பூ ரசம், பொன்னாங்கண்ணி கீரை கூட்டு போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வதால் நோயின்றி வாழலாம்.
இந்த மூலிகைகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள பழக வேண்டும். இதுவே நம் முன்னோர்கள் உண்ட மருந்தாகும்.