நம் ஆரோக்கியத்தின் ரகசியம் வீட்டு தோட்டத்தில் இருக்கு..!!
நம் வாழ்க்கை நம் கையில் என்று நம் பெரியவர்கள் சொல்வார்கள். அது போல, நம் குடும்பத்தின் ஆரோக்கியம் நம் கையில் தான் இருக்கு. இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் இருவரும் வேளைக்கு செல்ல வேண்டி உள்ளது. கிடைக்கின்ற ஓய்வு நேரம் மற்றும் சொற்ப நேரத்தில் நம் ஆரோக்கியத்திற் காக செலவிட வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
நம் வீட்டின் முன் வாசல் அல்லது மாடி, பின் வாசல் என நம்மால் முடிந்த அளவு நாமே முயற்சி செய்து இயற்கையான காய், கீரைகளை நம்மால் நிச்சயமாக வளர்க்க முடியும். தினமும் பராமரிப்பதும் அவசியம். இவ்வாறு மனதை மகிழ்விக்கும் காரியங்களை நாம் செய்யும் போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பொதுவாகவே, யார் கோபத்தோடு இருந்தாலும், அதை தணிக்க இயற்கையை ரசிப்பது, பச்சை வயல் புல்வெளி போன்றவை பார்ப்பதால் நம் மனம் சாந்தமாகும். மனிதனின் மனதுக்கும், பச்சை நிற செடி, மரங்களுக்கும், பெரிய தொடர்பு உண்டு என்பது நம் அனைவரும் அறிந்ததே. இதை அனைவரும் உணர்ந்து நாமே இதை நம் வீட்டில் உள்ள சிறிய இடத்தில் முயற்சிக்கலாமே..
விழிப்புணர்வு
பொருளாதார முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பதால், மன அழுத்தம், அமைதியின்மை, கோபம் போன்ற தேவை இல்லாத குண நலன்கள் நம்முள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான குண நலன்கள் ஏற்படாமல் நம்மை நாம் தான் பாது காத்து கொள்ள வேண்டும். வேலை பளு இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு, அனைவர்க்கும் வர வேண்டும்.
இதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.
மூலிகை செடி
தோட்டத்தில் தக்காளி கொத்தமல்லி, புதினா, வெண்டை, கீரை வகைகள், மிளகாய் சிறு பாத்தி போல் கட்டி விதைக்கலாம். இதோடு, நிலவேம்பு, துளசி, கற்றாழை, ஓம வள்ளி, வெற்றிலை, திருநீற்று பச்சிலை, உள்ளிட்ட மூலிகை செடிகளை வளர்க்கலாம். இதனை காலை மற்றும் மாலை பராமரிப்பதால் நம் முள் பல்வேறு மாற்றங்களும் ஏற்படுகின்றன.
அடுத்தபடியாக, செடி வளர்த்து பூ, காய்கள் விட துவங்கும் போது அளவற்ற மகிழ்ச்சியை உணர முடியும். நாமே விதைத்த காய்கறிகளை பறித்து சமைத்து சாப்பிடும் போது இன்னும் அதன் சுவையும் கூடும். அதன் ருசியே தனி தான். நம் அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களும் இதை முயற்சி செய்யலாம்.
மூலிகை பயிர்களை விதைப்பது முக்கியமான ஒன்று. நில வேம்பு, ஓமவள்ளி, கற்றாழை எங்க வேண்டுமானாலும் பயிரிட ஏற்றது. இதை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வேம்பு, ஓமவள்ளி சாப்பிட சளி, ஆஸ்துமா, காய்ச்சல், இருமலுக்கும் அடிக்கடி தொல்லை தரும் நோய்களும் பறந்தோடும். கற்றாழை சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.
ஒவ்வொரு செடியையும், விதைக்கும் போது, அதன் வளர்ச் சியை பார்க்க மனம் துடிக்கும். தினமும் அதனை ஒரு பார்வை யிட்டபடி, நம் கால்கள் நகர துவங்கும். வீட்டுக்கு வரம் போது செடியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு உள்ளதா என மனம் தேடும். அச்சமயம், வெளியிலிருந்து வரும் போது இருக்கும் மனக்கவலைகள், வாசலோடு நீங்கும்.
மன அழுத்தம், நிம்மதியின்மை ஏற்படாமல், மன அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். மருத்துவமனைக்கு செல்வதும், ரசாயன கலந்த காய்கறிகள் சாப்பிடுவதும் குறையும். மூலிகை செடிகளை வளர்ப்பதால், நோயின்றி வாழலாம். நீங்களும் முயற்சி செய்து, அருகில் இருப்பவருக்கும் பகிருங்கள் உங்கள் அனுபவத்தை.