வந்தாச்சு அரசுப் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கான அறிவிப்பு…..
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜூன் மாதம் திறக்க இருந்த பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் வரும் 13ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிகளுக்கான புதிய கட்டிடம் கட்டும் பணியை துவங்கி வைத்த போது அளித்த பேட்டியில் இதுகுறித்த அறிவிப்பை கூறியுள்ளார்.

அதன்படி வரும் 13ம் தேதி முதல் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு 5 டிவி சேனல்கள் மற்றும் யூ டியூப் சேனல் வழியாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வாயிலாக மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் மேலும் இதற்கான நிகழ்ச்சியை முதல்வர் ஆன்லைன் வாயிலாக தொடங்கி வைப்பார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த பாடத்திட்டம் இந்தியாவிலேயே இல்லாத வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாதிரி திட்டமாக அமையும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் பார்வை நலன்கருதி நேரக் கட்டுப்பாடு தேவை என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 5 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் இந்நேரத்திற்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் கருதி கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வகுப்புகள் துவங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
written by Srimathi