ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்..!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல், நேரடி கவுண்ட்டர்களின் மூலம் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது. இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் கூடுதலாக 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை திருமலையில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களின் மூலம் வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜசுவாமி 2வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.