21 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம்..!! விமானத்திலேயே விட்டுச் சென்றது ஏன்..?
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 21 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
துபாயிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. அந்த விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பினர். இந்நிலையில் விமானத்தை சுத்தம் செய்வதற்காக சென்ற தொழிலாளி ஒருவர் விமானத்தின் இருக்கையில் பண்டல் போன்று ஒன்று உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் நடத்திய சோதனையில் விமானத்தின் இருக்கை அடியில் பேண்டேஜால் சுற்றப்படு பேஸ்ட் படிவமாக தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை கடத்தி வந்த பயணி, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து இருக்கையிலேயே வைத்து சென்றது தெரியவந்தது.
அந்த பேஸ்ட் வடிவிலான தங்கத்தின் அளவு 421 கிராம் எனவும், இந்திய ரூபாயின் மதிப்பு 21.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விமானத்தில் தங்கத்தை வைத்து சென்ற பயணி குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.