கீதை நாயகன் கண்ணனை வரவேற்போம் கோகுலாஷ்டமி ஸ்பெஷல்
கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை அன்று கோகுலாஷ்டமி தினம் வருகிறது. கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து, பூஜை அறை வரையிலும் சின்ன கண்ணன் நடந்து வருவது போல் பாதச் சுவடுகளை மாக்கோலம் இடுவார்கள்.
குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டு அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலம் ஆக இடலாம். இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கின்றது. கோவிலுக்குச் சென்றால் முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியை தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியை பாடினார்கள்.
நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைப்பதால் குழந்தை கண்ணன் தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதை போல ஒரு தோற்றத்தை தரும் என்பதால் தான் இன்றைய தினம் பாதச்சுவடுகளை வாசலிலிருந்து வரைந்து வீட்டிற்குள் கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால் அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பூஜையறையில் கண்ணனுக்குப் அலங்காரம் செய்து அவருக்குப் பிடித்த பட்சணங்கள் வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு, அதிரசம், சுகியன் ஆகியவற்றை படையலிட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும்.
கோகுலாஷ்டமி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். மனிதர்களுக்கு பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரித்து தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமி விழா பகவான் கண்ணன் அவதரித்த நாள் அல்லவா? கடவுள் மனிதனாக அவதரித்து கீதையை பரிசளித்துள்ளார். அந்த மாயக் கண்ணன் பிறந்த நாளை நாடே உற்சாகமாக கொண்டாடுகிறது.
கண்ணன் பிறந்த ஆலயங்களில் அலங்காரம் தோரணங்கள் களைகட்டி இருக்கும். இன்றைய சூழலில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள். வீட்டிலேயே உங்களால் முடிந்த அளவு சிறப்பாக பூஜை செய்யலாம். முழுமுதற் கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வாசுதேவன் மகனாகப் பிறந்தார்.
இந்த நாளைத்தான் நாம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். கிருஷ்ணர் அஷ்டமி அன்று பிறந்ததால் கோகுலாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜெயந்தி என்றும் இவர் பிறந்த தினத்தை அழைக்கிறோம்.