TOP STORIESதமிழகம்வாழ்க்கை முறை

GO…. CORONA…. GO….

இறைச்சிக்கடைகளில் வழக்கமாக ஆடுகளிலும் கோழிகளும் தான் பலியாகும். இப்போது அதற்காக மக்களே பலியாகத் துணிந்துவிட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளுக்கு ஒரு தத்துவத் தனிமதிப்பு உண்டு. அன்று மட்டும் அதிகநேரம் தூங்குவது. குளிப்பதில் இருந்து தனித்திருப்பது. அதிகநேரம் டி.வி.யில் புதைந்து கிடப்பது. மதியநேரத்தில் கறிச்சோறுக்குப் பின் கட்டாயத் தூக்கம், மாலையில் மினி சுற்றுலா என செமத்தியா செழிப்பா ஒரு குமால்டியாக போய்கிட்டு இருந்த வாழ்க்கைல பிரகாஷ்ராஜ் மாதிரி எண்ட்ரி கொடுத்து பெரிய குடைச்சலைக் கொடுத்துவிட்டது, இந்த கொரில்லாத் தாக்குதல் நடத்தி வரும் கொரனா.

கொரனா, நமக்கிருந்த ஞாயிறு மோகத்தை ஒழித்து எல்லா நாட்களையும் ஞாயிற்றுக்கிழமை போல் ஆக்கிவிட்டது. அதற்காக எல்லா நாளும் கறிச்சோறு வாய்க்குமா? சரி, காலண்டர் படி வரும் ஞாயிற்றுக் கிழமையிலாவது கறி தின்று வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று போனால் இறைச்சிக் கடைகளில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றன நம் “சேம் பிளட்டுகள்”.

கொரனாவை எல்லா இடங்களிலும் கவனமாகக் கட்டுப்படுத்தி கடைசியில் இறைச்சிக்கடைகளில் மொத்தமாக அவுத்து விட்ட கதையா போச்சேனு நினைத்த அதிகாரிகள் இறைச்சிக் கடைகளை அரக்குப் போட்டு மூடிவிட்டார்கள். டாஸ்மாக்கைத் திறந்தாலும் திறப்பார்களே ஒழிய இறைச்சிக் கடைகளுக்கு நோ சான்ஸ். நம்ம மக்கள் காட்டிய ஆர்வம் அப்படி!… பொதுவாகவே மாமிசம் சாப்பிடுவதற்குப் பல காரணங்கள் இருந்து வருகின்றன. காய்கறிகள் மண்ணில் இருந்துதான் அவற்றுக்கான சத்தைப் பெறுகின்றன. இன்றோ மண் மலடாகித் தன் சத்தை இழந்து விட்டது. உடம்புக்குத் தேவையான சத்தை இறைச்சியில் இருந்து தான் பெற முடிகிறது. அதனால்தான்… அதுவும் என் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காகத்தான் மாமிசத்துக்கு மாறிவிட்டோம் என்கிறார்கள் சிலர்.

இந்தத் தொற்றுநோய் காலத்தில் நன்றாகச் சாப்பிட்டால்தானே உடம்பைப் பாதுகாக்க முடியும் என்கிறார்கள் சிலர். இதுபோன்ற விடுமுறை இனி வாய்க்குமா அதான் வீட்டில் இருக்கும் போது நல்லது பொல்லத சாப்பிட்டு சந்தோசமா இருப்போமே என்கிறார்கள் சிலர்.

இப்படி ஆள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி இறைச்சிக்கடைகளில் குவிந்தார்கள். ஆரம்பத்தில் அக்கடைகளுக்கு அனுமதியளித்த அரசாங்கம் கூடிய கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து அவற்றை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்து. பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மூடப்படும் என்றது. இப்போது பல பெருநகரங்களில் மொத்தமாக மூடி இருக்கிறது.

மக்கள் முகநூலில் கறிபோச்சே என மங்கலான முகத்துடன் வருந்திக் கொண்டிருக்கின்றனர். இனி சமூக இடைவெளியைக் கட்டாயம் கைபிடிப்போம் என சபதம் ஏற்று வருகின்றனர். ஊரடங்கு சற்று தளர்வில் இருக்கும் ஊர்களில் வாய்க்கு வந்த விலை சொல்லி விற்கும் அந்தக் கசாப்புக் கடைகளில், ஆட்டுக்குட்டிகளைப் போலவே பாவமாக நின்று கொண்டிருக்கிறார்கள் மக்கள்.இவர்கள் நிலை விரைவில் மாற Go Corona Go.

GO CORONA GO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *