புது வெள்ளை மழை… பனியில் விளையாடிச் சண்டை
மத்திய கிழக்கில் பெய்துவரும் பனி இஸ்ரேல் ஜெருசலத்தையும் விட்டுவைக்கவில்லை. அங்கு பெய்து வரும் வெள்ளை மழையால் ஜெருசேல மக்கள் ஆனந்தமடைந்துள்ளனர்.
ஜெருசலத்தின் பழைய நகருக்கு கொண்டுச்செல்லும் திறந்தவெளி அரங்கான டமாஸ்கஸ் நுழைவாயிலில் பாலஸ்தீனர்கள் திரண்டனர்.
அங்கு வழக்கமாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினருடன் மோதும் அவர்கள் இப்போது ஒருவர் மீது ஒருவர் பனிப்பந்துகளை வீசி வேடிக்கையாகச் சண்டையிட்டுக் கொண்டனர்.
பக்கத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் அதனைத் தடுப்பதற்குப் பதிலாகப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டனர்.
நகரின் வேறு பகுதிகளில் பழமைவாத யூதர்களும் அதே போன்று பனியைப் பந்துகளாக உருட்டிச் சண்டையிட்டுக் கொண்டனர்.
அதே வேளையில் பனிபடர்ந்த சாலைகளில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.மக்களை வீட்டிலேயே இருக்குமாறு ஜெருசலம் நகராட்சி கேட்டுக்கொண்டது. நகரின் முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது. பள்ளிகள் இன்று வகுப்புகளை ரத்துசெய்தன.