சுன்டி இழுக்கும் நாஞ்சில் நாட்டு உணவு…
நாஞ்சில் நாடு என்பது தற்போதைய கன்னியகுமாரி, மற்றும் நகர்கோயில் பகுதிகளை உள்ளடக்கியது. பொதுவாகவே ஒவ்வொரு ஊர்களுக்கும் தனி உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் இருக்கும், அந்த வகையில், கொங்கு மண்டலத்திற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி பேச்சு வழக்கு மரியாதையாக கருதப்படுகிறது. கொஞ்சம் இலங்கை தமிழ் மற்றும் மலையாள வார்த்தை கலப்புகள் அதிகமாக இருக்கக் கூடிய பகுதி.
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சமையல் மரபு நாஞ்சில் நாட்டு உணவு என்று அழைக்கப்படுகிறது. நாஞ்சில் நாட்டு உணவில்அண்டை மாநிலமான கேரள சமையலின் தயாரிப்பு மற்றும் சுவையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நாஞ்சில் நாட்டு உணவின் முக்கிய பொருட்கள் மீன், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகும். மேலும், மிளகு, தனியா, சிவப்பு மிளகாய் மற்றும் பெருஞ்சீரகத்துக்கும் முக்கிய இடம் உண்டு. அரிசி கொட்டை அரிசியாக தடிமனாக இருக்கும். மாட்டிறைச்சியும் இந்த பகுதிகளில் பரிமாறப்படுகிறது. அண்டை மாநிலத்தைப் போல், தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி பரிமாறும் சில பகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.
தீயல், உளுந்துசோறு, பரோட்டா மற்றும் முட்டை அவியல் ஆகியவை இப்பகுதியின் சிறப்பு உணவு அயிட்டங்களாக சொல்லலாம். இந்த பகுதிகளில் செய்யப்படும் நாஞ்சில் மீன் கறி மிகவும் சுவையாக இருக்கும். எந்த மீன் குழம்பாக இருந்தாலும் அதற்கென தனிச்சுவை இருக்கும். இறைச்சியும் பல வகைகளில்சமைக்கப்படுகிறது என்றாலும் இங்கு மீன் கறிக்கே முக்கியத்துவம் என்றால் மிகையாகாது.