ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

First day of Navaratri 2023: நவராத்திரி 2023 முதல் நாள் அம்மனை வழிபடும் நேரம்,முறை, கொலு வைக்கும் முறை

ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகையாக நவராத்திரி உள்ளது. இந்த நவராத்திரியின் சிறப்பே 9 நாட்களும் பெண்களுக்கான பண்டிகை ஆகும். ஒன்பது நாட்களும் அம்மனை ஒவ்வொரு ரூபத்தில் அலங்கரித்து ஒவ்வொரு நிற உடை அணிவித்து வீட்டில் ஒவ்வொரு தினத்திற்கும் ஏற்ற உணவுகள் செய்து அம்மனை வழிபடுவர். இந்த ஒன்பது நாட்களும் பெண்களுக்கும் ஒரு திருவிழா போல தான் இருக்கும். அம்மனை கொலு வைத்து வணங்கும் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் அம்மனுக்கு எந்த நிற உடை அணிவித்து வணங்குகிறார்களோ அதே நிற உடைகள் பெண்களும் அணிந்து காணப்படுவர். எனவே 9 நாள் வீடே திருவிழா போல் இருக்கும்.

நவராத்திரி மகிமை 2023

நவராத்திரி என்பது அசுரனை அழிக்க அம்மன் தவம் இருந்த நாட்களைக் குறிக்கிறது.அம்மன் என்றாலே நமக்கு சிறப்பு தான். தீய சக்திகளை அழித்து வீட்டில் நல்ல சக்திகளை மங்களகரமான விஷயங்கள் நடக்கவும் செல்வம் செழிக்கவும் ,மன தைரியம் ,குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும் நவராத்திரி உதவுகிறது அம்மனை நமக்கு நேரடியாக வந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபத்தில் வரம் தருவதாக ஐதீகம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபம்

அம்மன் நமக்கு நன்மைகளை கொடுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபத்தில் காட்சி தருகிறார். மகேஸ்வரி, கௌமாரி,வராஹி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி சரஸ்வதி ,நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்களில் அவதரித்தாலும் நமக்கு நன்மைகளை அனைவரும் ஆதார சக்தி ஒன்றே. எனவே இந்த ஒன்பது நாட்களில் ஒவ்வொரு ரூபத்தில் அவதரித்து நமக்கு ஒவ்வொரு வித நன்மைகளை கொடுக்கும் காலமாக நவராத்திரி உள்ளது.

நவராத்திரி 2023 கொலு வைக்கும் நேரம்

எப்பொழுதும் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி முதல் நாள் தொடங்கும். எனவே கொலு வைக்கும் பெண்கள் மகாளய அமாவாசை அன்று இரவே பொம்மைகளை ஒரு நல்ல நேரத்தில் சுத்தம் செய்து அடுக்கி விடுவர். ஆனால் இந்த வருடம் மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணமும் சேர்ந்து வருவதால் அந்த நேரத்தில் பொம்மைகளை வைக்க முடியாது. எனவே முதல் நாளில் நீங்கள் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எழுந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு காலை 6 மணியிலிருந்து 11:45 மணிக்குள் நீங்கள் கொலு பொம்மைகளை அடுக்கிக் கொள்ளலாம்.

நவராத்திரி 2023 முதல் நாள்

I நவராத்திரி 2023 ஆம் ஆண்டு இந்த வருடம் நவராத்திரி முதல் நாள் அக்டோபர் 15ஆம் தேதி பிரதமை திதியில் தொடங்குகிறது. முதல் நாளில் காலை 6.00 மணி முதல் 11.45 மணிக்குள் கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து நவராத்திரி பூஜையை நல்ல நேரத்தில் தொடங்கி விட வேண்டும்.

நவராத்திரி முதல் நாளில் அம்மன் மகேஸ்வரி தேவியாகவும், நவதுர்க்கைகளில் முதல் தேவியான சைலபுத்திரி தேவியாகவும் அவதரிக்கிறாள். இந்த நாளில் அம்மனுக்கு பச்சை நிற உடை அணிவித்து வழிபட வேண்டும். மன அமைதி, தைரியம் , குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படுவதை குறிக்கிறது. முதல் நாளில் மல்லிகை பூ மற்றும் வில்வ இலை வைத்து நவ துர்க்கையை வழிபட வேண்டும்.

மேலும் நெய்வேத்தியமாக வெண்பொங்கல் ,சுண்டல் ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும். துர்க்கை அம்மனை வழிபட முதல் நாளில் பாட வேண்டிய ராகம் தோடி ராகம் ஆகும். முதல் நாள் பூஜையை மாலை ஆறு மணிக்கு மேல் நல்ல நேரத்தில் தொடங்கலாம். இந்த பூஜைகள் இருக்கும் பெண்களும் முதல் நாளில் பச்சை நிற உடை அணிந்து அம்மனை வழிபடலாம்.அம்மனின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *