திரை உலகை கதற வைத்த வடிவேல் பாலாஜியின் இறப்பு
வடிவேல் பாலாஜி சின்னத்திரை உலகில் சிறந்த காமெடி நடிகராக இருந்தார். இவரது காமெடியை பார்க்கும் அனைவருக்கும் ஆனந்தம் பொங்கும். மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்தவர் இன்று அழுகையை நமக்கு கொடுத்து சென்றிருக்கின்றார்.
வடிவேல் பாலாஜி
17 பெப்ரவரி 1978 மதுரையில் பிறந்தவர் வடிவேல் பாலாஜி. இவருடைய நகைச்சுவை தன்மையும் குரல் மாற்றிப் பேசும் வல்லமையும் இவரை திரையுலகில் நின்று பேச வைத்தது.
சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி பல திறமைசாலிகளுக்கு மேடையாக அமைந்துள்ளது. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலக்கு கலக்கு என்று கலக்கிய வடிவேல் பாலாஜி விஜய் குடும்பத்தில் ஒருவர் ஆனார்.
காமெடி குடும்பமாக ராமர் தங்கதுரை வடிவேல் பாலாஜி எனப் பலர் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்னும் சுற்றில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் புதுப்புது கதையுடன் மக்களை மகிழ்ச்சிகரமாக வைப்பதில் எந்த குறையும் வைக்க மாட்டார்கள். கோலமாவு கோகிலாவில் வெள்ளித்திரை பயணத்தை 2018ல் துவங்கினார். திரையுலக பயணத்தை சமீபத்திலேயே துவங்கியவருக்கு இப்படியா நிகழ வேண்டும்!
வடிவேல் பாலாஜியை நினைத்தாலே மனம் மகிழ்ச்சியில் பொங்கும். இவரது உடல் பாவனையும் கவுண்டர் கொடுக்கும் காமெடி பேச்சும் அனைவரது இதயத்தையும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. இன்று அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
மாபெரும் கலைஞன் சின்னத்திரையில் ஒவ்வொரு வீட்டிலும் முதன்மையாக நின்ற காமெடி நடிகர் இவரது இழப்பு, பெரும் இழப்பு என்று அனைவரும் கருதுகின்றனர். யாராலும் இந்த தகவலை நம்ப முடியவில்லை இவருடன் இணைந்து 13 வருடம் பயணித்த சின்னத்திரையில் மற்றொரு காமெடி நடிகரான ராமர் அவர்கள் மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்து இருக்கின்றார்.
உடல்நிலை சரியில்லாதபோது அவரை பார்க்கச் சென்றாராம் ஆனால் பார்க்க முடியவில்லை என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இன்று அவர் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மனம் வருந்திக் கவலை தெரிவித்து இருக்கின்றார்.
சிரிச்சா போச்சு குழு இன்று களையிழந்து காணப்படுகின்றது. எங்கள் தூன் விழுந்துடுச்சு என்று தங்கதுரை துடித்து அழுகின்றார். விஜய் டிவியில் தவிர்க்கமுடியாத காமெடி நடிகரான இவருக்கு வயது 42 ஆகும்.
மூளை கசிவு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்ததாகத் தகவல்கள் கிடைக்கின்றன. நடிகர் வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மிகத் திறமை வாய்ந்த நடிகரான வடிவேல் பாலாஜி மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது என அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் தனது பதிவில் தெரிவித்திருக்கின்றார்.
வடிவேல் பாலாஜி, நகைச்சுவை நாயகன் வடிவேலு நடிக்கவில்லை என்ற குறையைப் போக்கிய மாபெரும் கலைஞன். அவரது இழப்பு, பெரும் இழப்பு என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இரங்கல் பதிவுகளாகத் துக்கத்தை சுமந்து நிற்கின்றன.
அவரது குடும்பத்தினர் வேதனையில் வாடுகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து வரப்பட்டது. சிகிச்சைக்கு பணப் பற்றாக் குறையினால் அரசு மருத்துவமனையான ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பயனில்லாமல் இன்று காலமானார்.
வடிவேல் பாலாஜி இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லையென அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்கான ஆழ்ந்த அனுதாபங்களை அனைவரும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்களின் சார்பாக சிலேட்குச்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து இவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறது.