செய்திகள்தமிழகம்

பிப்ரவரி 27 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததோடு, கொரோனா பாதிப்புகளும் அதிகரித்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் கடிதம் எழுதியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டதால், தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் அவர்களுக்கு மீண்டும் சொட்டுமருந்து வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *