நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் மோசடி..!! இபிஎஸ் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு..!!
தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மற்றும் கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு கள்ள ஓட்டுகளை பதிவு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் சென்னையில் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து,தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற நாளை மறுநாள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன என்றும், குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் உள்ள பூத்களில் திமுகவினர் கள்ள ஓட்டுகளை போட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, சென்னையில் பல வார்டுகளில் உள்ள பூத்களில் திமுகவினர் கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர்.
திமுகவினர் தோல்வியை தழுவுவார்கள் என்ற பயத்தின் காரணமாக சென்னை மாநகராட்சிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் அத்துமீறி புகுந்து இப்படி கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளார்கள். கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை .
காவல்துறையினர் முன்னிலையிலேயே திமுகவினர் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணம் பட்டுவாடா செய்தார்கள். மேலும் திருவல்லிக்கேணியில் உள்ள 114 மற்றும் 115 வது வார்டுகளில் திமுகவினர் கள்ள ஓட்டு செலுத்தியுள்ளார்கள். இதற்காக மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறி அரசு அதிகாரிகளையும் மிரட்டுகிறார்கள்.
குறிப்பாக,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால்தான், மக்களில் பெரும்பகுதியினர் வாக்களிக்க வரவில்லை.“ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இதற்காக சில வீடியோ ஆதாரங்களையும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது செய்தியாளர்களிடம் காட்டினார்.