நான்கு மாதத்தில் இரண்டரை மடங்கு உயர்வு..!! தீயாய் வேலை செய்யும் மத்திய அரசு..!!
டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கியமான ஒன்பது பெருநகரங்களில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால் சமீபகாலத்தில் மின்சார வாகனங்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசும் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், மத்திய அரசின் முயற்சியால் சென்னை, சூரத், புனே, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புதுடெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில், கடந்த நான்கு மாதங்களில் மின்சார சார்ஜிங் நிலையங்கள் இரண்டரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் மின்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், இந்த ஒன்பது நகரங்களில் கூடுதலாக 678 பொது சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள 1,640 பொது மின் சார்ஜிங் நிலையங்களில், 940 சார்ஜிங் நிலையங்கள் இந்த நகரங்களில் மட்டும் உள்ளன. இதையடுத்து நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களும், முக்கியமான நகரங்களில் 22 ஆயிரம் மின் சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.