வாழ்க்கை முறை

வீட்டில் நோயுற்ற பெற்றோர்கள் இருக்கிறார்களா? – இதுவே ஒரே வழி!

உங்கள் வீட்டில் நோயுற்ற பெற்றோர்கள் இருக்கிறார்களா? ஆம் என்றால் உணர்வுரீதியாக நீங்கள்  எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள Google Search எல்லாம் தேவைப்படாது. மண்டை காய்ந்து ஏறக்குறைய இரத்தக் கொதிப்போடு தவித்துக்கொண்டிருப்பீர்கள்.  

நம்மைப் பெற்றவர்களைக் கடைசி காலத்தில் கவனித்துக் கொள்வது நம் கடமைதான் என்றாலும், நாம் இருக்கும் நிலை என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் நடக்கும் பொழுது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நீங்கள் அனுபவிக்கும் சோதனை யாருக்கும் வரக் கூடாது பாஸ்…   அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் நம்மை ஒரு புறம் பயமுறுத்தும். நம்மை மட்டுமே நம்பி வாழும் மனைவி,பிள்ளைகளைப் பார்ப்பதா? வேலைப் பிரச்சினைகளைக் கவனிப்பதா? EMI கட்டுவதா?  நீண்ட நாளாகப் பழுதாகி தெய்வச் செயலில் இயங்கிக் கொண்டிருக்கும்  இரு சக்கர வாகனத்தைச் சரி செய்வதா?

இப்படி நாம் தூக்கிச் சுமக்கப் பிரச்சினை மூட்டைகள் பல இருக்க, பெற்றோர்களிடம் பேசவோ அவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவோ உள்ளபடியே நமக்கு நேரமோ மனநிலையோ வாய்ப்பதில்லை.       பெற்றோர்களின் நினைப்போ வேறு. “நாம் பெற்று வளர்த்த பிள்ளை நம்மை அலட்சியம் செய்கிறான். அவனுக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைகள் தான் பெருசாப் போய்ட்டாங்க. மூணு நாளா சாப்பிட முடியாமக் கெடக்கேன். என்ன ஏதுனு கேட்கல. ஆஸ்பத்திரிக்கு போகணுமா? மாத்திரை இருக்கா? இல்லையா? இப்படி எதைப் பத்தியும் அக்கறையில்லாம இருக்கானே.நாம அவனுக்குப் பாரமா போய்ட்டோம்” என்று நொந்து கொண்டிருப்பார்கள். நமக்குக் கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளையும் மனைவியும் பிள்ளைகளும் பிடுங்கிக் கொள்ள என்னதாங்க பண்றது?      

     
யாராவது உறவினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் இந்த வாய்ப்பாவது கிடைத்ததே என நம் பெற்றோர்கள் மனத்தில் இருப்பதைப் புலம்பித் தீர்க்க அவர்களும் போற போக்குல ஒரு பிட்டப் போட, நம் மனைவிக்கு அது மானப் பிரச்சினையாக,  நமது கதி அதோ கதி!.    நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசினாலும் Why Blood? Same Blood ? கதையாக இயல்பாய் முடித்து விடுவார்கள். இந்த நிலையில் வாடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் கொரனோ வைரஸ் பாதித்தவர்களைக் காட்டிலும் அதிகம்.   

இதை எப்படித்தான் கடப்பது? உணர்வு மயமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. பொறுமையோடு  கடக்க மட்டுமே முடியும். உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டாலோ பிறகு அதி பயங்கரமான விளைவைச் சந்திக்க நேரிடும் . பொறுமை , அமைதியோடு நடந்து கொள்ள முயலுங்கள்.  

பிறகு அதுவே பழகிவிடும். கடவுள் சற்று கருணை காட்டட்டும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *