மனதில் ஆசை, பற்றுதல், கோபம் போன்ற உணர்ச்சிகள் நீக்க வழி
விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான்.
தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.
எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன.
எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். மனதில் உள்ள உணர்ச்சிகளை நீக்குவது என்பது இயலாது என்பதை புரிந்து கொள்வது அவசியம். எனக்கு கோபமே வராது என்று ஒருவர் கூறினார் என்றால் அவர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்.
சாதாரண மனிதர்கள் தன் மனதில் எழும் உணர்ச்சிகளை அனுபவித்துக் கரைத்துக் காணாமல் போகிறார்கள். ஞானிகள் அதை பக்தியாக மாற்றி காலத்திற்கும் அழியாது புகழோடு வாழ்கிறார்கள். தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.. ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தியே போற்றி…
பற்றுதலை நீக்க ஏதேனும் வழி உள்ளதா? வழி..!
ஆசை என்ற பற்றுதல் இல்லாமல் வாழ்க்கையை நடத்து என்று பகவத் கீதையும் மற்ற நீதி நூல்களும் கூறுகின்றன. ஆனால் இதை நடைமுறைப் படுத்துவது எவ்வாறு? பற்றுதல் என்பது மனதின் இயல்பாயிற்றே? பற்றுதலை நீக்குவது என்பது மனதின் இயல்புக்கு எதிரான செயல் அல்லவா? இயற்கைக்கு எதிராக செயல்படுதல் என்பது இயலாதே?மனம் உள்ளவரை ஆசை என்பதும் பற்றுதல் என்பதும் இருந்தே ஆக வேண்டுமே!
பிறகு இந்த உலக இன்பங்களின் மேல் உள்ள பற்றுகளைத் துறப்பது எவ்வாறு? ஏதேனும் வழி உள்ளதா? ஆம். வழி இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. என்கிறார். ஆசைகளை விட நினைக்கிறாயா? பற்றுகளைத் துறக்க நினைக்கிறாயா? ஆசை, பற்றுகளற்று எவன் ஒருவன் இருக்கிறானோ அவனிடம் ஆசை கொள். அவனைப் பற்றிக்கொள்.
இதுவே உலக ஆசைகளையும் பற்றுகளையும் விடுவதற்கான வழி என்கிறார். ஆசைகளற்று உலகில் ஒருவர் இருக்கிறார் என்றால் இறைவனைத் தவிர வேறு யாராக அது இருக்க முடியும்? துன்பங்களைத் தரக்கூடிய உலகப் பொருட்களின் மேலிருந்து விடுதலை பெற ஆசையை அடியோடு நீக்க வேண்டியதில்லை. ஒரிடத்திலிருத்து ஆசையை, பற்றுதலை மாற்றி வேறிடத்தில் வைக்க வேண்டும் அவ்வளவே.
ஆசை, பற்றுதல் என்பது மனதின் இயல்பு. இயற்கையின் படைப்பு. அதனால் மனிதன் உலகில் உள்ள பொருட்களில் பற்றினை வைக்கிறான். ஆனால் என்றோ ஒரு நாள் இயற்கை மனிதனின் முகத்தில் அறைந்து நிலையாமையைப் புரிய வைக்கிறது.
நாம் நேசித்தது இல்லாது போனால் மனமானது பற்றிக் கொள்ள இடம் தெரியாது அலைகிறது. மனதில் மிகப் பெரிய வெற்றிடம் சுமையாக மாறிவிடுகிறது. இதனால் மனிதன் நிலைகுலைந்து போகிறான். இறை நம்பிக்கை உடையவனோ இந்த நிலையிலிருந்து எளிதில் மீள்கிறான். மனமானது என்றும் நிரந்தரமான அழிவில்லாத பரம்பொருளை பற்றிக் கொண்டு துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறது.
ஞானத்தை அடைந்த மகான்கள் இறை பக்தியை மட்டும் விட்டதே இல்லை. ஞானிகளுக்கும் மனதில் ஆசை, பற்றுதல், கோபம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. இல்லாவிடில் இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் தோன்றியே இருக்காது. மனதில் இருந்த ஆசைகள் சிருங்கார ரசமான கவிதையாக வெளிப்பட்டது. மனதில் உள்ள கோபம் யுத்த காண்டமாக வெளிப்பட்டது.