முரட்டு சிங்கிள்களை மிரட்டும் ட்ரோன் காமிரா
குயிலப்புடுச்சி கூண்டிலடச்சு கூவச் சொல்லுகிற உலகம்.. மயிலப்புடுச்சு கால ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்.. இதுதான் முரட்டு சிங்கிள்களின் மைண்ட் வாய்ஸ். ஒரு காட்டாற்று வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது கொரனா ஊரடங்கு. பலரும் விதவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்தாலும் காலில் றெக்கை முளைத்து பறந்து திரிந்த முரட்டு சிங்கிள்கள் வீட்டில் விட்டத்தைப் பார்த்து அடங்கியிருக்க முடியவில்லை. வெறித்து வெறுத்துப் போய்விட்டார்கள் பாவம். காய்கறி,மருந்து, ரேசன் கடை இப்படி இருக்கும் காரணம் எல்லாத்தையும் சொல்லி வீதி உலா வந்தார்கள். உக்கிக்கும் உடற்பயிற்சிக்கும் உருக்குலையாத இரும்பு உள்ளங்களின் நித்திய காதலியான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகுதான் பீஸ் போன பல்பாகிப் போனது வாழ்க்கை. வறண்ட மனநிலையில் உழன்ற அவர்கள் ஆள் சேர்த்து மைதானத்தில் விளையாடப் போனால் ட்ரோன் காமிரா துரத்தியது. தலைதெறிக்க ஓடித் தப்பிப் பிழைத்தார்கள். முரட்டு சிங்கிள்களுக்கு இப்போது பிடிக்காத வார்த்தையே ட்ரோன் காமிராதான். அவர்களைக் காட்டிக் கொடுக்கும் கருங்காலிக் காமிரா மீது செம்ம கடுப்பில் இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் காட்டுப் பகுதியில் உடும்பு பிடித்து உண்டு மகிழ்கிறார்கள். அதையும் மீறி வெளியில் வந்தால் கொரனா வேணுமா ஜி என்று நூதன தண்டனை தந்து காவல்துறையினர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்குக்கு அடங்காத முரட்டு சிங்கிள்களே உங்கள் நிலை புரிகிறது. கண்ணுக்குத் தெரியாத கிருமியை எதிர்த்துப் போராடிவரும் நிலையில் நமது ஜாலி வாழ்க்கையை தற்காலிகமாக தள்ளிப்போட்டுத்தான் ஆக வேண்டும். கொரனா காலத்தை ஆக்கப் பூர்வமாகக் கடக்கும் வழிகளைத் தேடலாம். நாம் பார்க்கத் தவறிய படங்களைப் பார்க்கலாம். பிடித்த பாடல்களை உரக்கப் பாடி மகிழலாம். பிடித்ததைப் படிக்கலாம். நண்பர்களை அழைத்துப் பேசி மலரும் நினைவுகளில் மயங்கலாம். உறவினர்களின் தொடர்பைப் புதுப்பிக்கலாம். பிடித்த டிஸ் அனைத்தையும் வகையாகச் சாப்பிட்டு மகிழலாம். சமைக்க முயற்சிக்களாம். கொரனா கஷ்டங்களை டிக் டாக் போட்டு கலாய்க்கலாம். புதியன கற்கலாம். கெட்டப்பை மாற்றிப் பார்க்கலாம்.
மொட்டை மாடியில் பாடி பில்டிங் பண்ணலாம். யோகா பயிற்சியில் ஈடுபடலாம். இப்படி ஏதாவது செய்து எப்படியாவது கடந்து விடுவோம். ஒரு கிருமிக்குப் பயந்து புலம்பிக் கொண்டிருப்பதை நிறுத்தி விடுவோம். என்ன வந்தால் என்ன? பார்த்துக் கொள்ளலாம். உங்கள் மனத்தை வண்ண மலர்களால் ஒவ்வொரு நாளும் அலங்கரித்துக் கொண்டு நேர்மறையான சிந்தனைகளோடும் அழகான புன்னகையோடு எதிர் கொள்வோம். நாம் முரட்டு சிங்கிள்கள்.
Drone camera and youth
super