கொரனாவுக்குப் பிறகு-ஓர் இந்தியக் கனவு!
நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது மகிழ்ச்சி. ஆனந்தக் கூச்சலில் அனைவரும் திளைக்கின்ற உன்னதக் காட்சி. கொரனாவைக் கொன்றொழித்த எமது அரசுகள். கருணை பொங்கிப் பெருகும் எமது முதலாளிகள். வாழ்வும் வயிறும் நிரம்பித் ததும்பிய மயக்கத்தில் மக்கள். பள்ளிக்கும் கல்லூரிக்கும் புன்னகை விளக்கேந்திச் செல்லும் மாணவர்கள். அடக்கி வைத்த அறிவைக் கொட்டித் தீர்க்கும் பேராசிரியர்கள். இதுவரை நம் வங்கிக் கணக்குகள் பார்த்திராத செல்வக் குவியல். குறைவில்லாத பூஜை புனஸ்காரங்களில் கடவுளர் குடியிருப்புகள். வீடு தேடி வந்து குறை தீர்க்கும் அரசு அதிகாரிகள். கட்டித் தழுவி அன்புச் சுரங்கத்தின் ஆழம் தேடும் எதிர்க்கட்சிகள். சமத்துவம் உறுதிப்பட்ட சமூகம், வங்கிக் கஜானாவில் நவரத்தின ஜொலிப்பு. நல்லிணக்கத்தின் தேவை தீர்த்த சமயப் பெரியோர். நட்பு பாராட்டும் பாகிஸ்தான். கொரனாவுக்குத் தடுப்பூசி கண்டறிந்த இந்திய விஞ்ஞானம். சுங்கவரி இல்லாத வாகனப் பயணம்.அயல் நாட்டு முதலீட்டில் இந்தியத் தொழிற்சாலைகள்.
வேலையில்லாதவரே இல்லாத இந்தியா, வேலை தேடி இந்திய விமான நிலையங்களில் குவியும் அமெரிக்கர்கள். குப்பை இல்லாமல் தூய்மை பளபளக்கும் வீதிகள். தரமாக அரசே வழங்கும் சர்வதேசக் கல்வி.ஓழுக்கமே உயிரெனப் போற்றும் குடிமக்கள், போராட்டங்கள் இல்லாத இணக்கம். ஊழல் நீக்கிய அதிகாரிகள். மூத்தோரை அன்பாய்ப் பேணும் குடும்பங்கள். தடையில்லா மின்சாரம். தடங்கலற்ற இணைய இணைப்பு. நதிகள் இணைக்கப்பட்ட பசுமை படர்ந்த டெல்டா பகுதிகள். தேசபக்தி உள்ளம் எங்கும் ஊறித் திளைத்த இளைஞர்கள். இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்திய பணக்கார நாடுகள். அல்லல் தீர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள். வரியை நேர்மை மாறாது மகிழ்வோடு செலுத்தும் தொழிலதிபர்கள். இப்படிப் பூலோக சொர்க்கமாய் திகழும் என் இந்தியாவின் குடிமகனாய் குறைந்தது நூறாண்டேனும் வாழ்ந்து வாழ்த்தியிருக்கும் காலம் கொரனாவிற்குப் பிறகு வாய்க்க வேண்டும். இது ஓர் இந்தியக் கனவு. நனவாக நாளும் உழைப்போம்.