இபிஎஸ் வார்டிலேயே தோற்ற அதிமுக..!! தொண்டர்கள் கடும் அதிர்ச்சி..!!
தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல்களில் மாநில ஆளும் கட்சியே எப்போதும் வெற்றி பெறும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், தற்போது நடந்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரு வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
அதேசமயம், ஆளுங்கட்சியான திமுக. குடும்ப பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்காதது, நகைக்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் அதிமுகவின் பக்கம் இருந்தன. இதனால் எப்படியும் அதிமுகவும் குறிப்பிடத்தக்க அளவில் இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக அதிமுக கொங்கு மண்டலத்தில் எப்போதுமே பலமாக இருக்கும் நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனது கோட்டையிலும் அதிமுக சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை.
குறிப்பாக, எஸ்பி வேலுமணியின் இரும்புக்கோட்டையாக உள்ள தொண்டாமுத்தூர் பேரூராட்சியையே திமுக முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக வென்றுள்ளது.
இந்நிலையில், அதிமுகவுக்கு அடுத்த பேரிடியாக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 23ஆவது வார்டையும் திமுக கைப்பற்றியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.