கோவையின் அடுத்த மேயர் யார்..!! திமுக கட்சிக்குள் கடும் போட்டி..!!
அதிமுகவின் கோட்டையான கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்து கோவையின் மேயர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து வரும் மார்ச் 4ஆம் தேதி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகின்றன.
கோவை மாநகராட்சியில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள மூன்று பெண்கள் மேயர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளனர்.
இதில் முதலாவதாக இருப்பவர் கோவை 52வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலக்குமி இளஞ்செல்வி ஆவார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கின் மனைவியும் கூட. நா.கார்த்திக் ஏற்கனவே கோவை துணை மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலக்குமி இளஞ்செல்வியும் ஏற்கனவே கவுன்சிலராக இருந்ததோடு மாமன்றம் குறித்த அனுபவம் இருவருக்குமே இருப்பதால் இவருக்கே மேயர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக உள்ளவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள் நிவேதா. 22 வயதே ஆன நிவேதா பஞ்சாபில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே 97 வது வார்டில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
இவரது தந்தை சேனாதிபதி எப்படியாவது மேயர் பதவியை வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பதோடு, மகள் வெற்றி பெற்ற கையோடு முதலமைச்சர் ஸ்டாலினையே நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நிவேதா ஸ்டாலினிக்கு ஒரு வெற்றி வாளையும் பரிசளித்துள்ளார்.
இவர்களை போலவே மேயர் பதவிக்கான பட்டியலில் அடுத்து இருப்பவர் மீனா லோகு. இவர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்ததோடு திமுக மகளிரணி துணை செயலாளராகவும் இருந்தவர். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த காரணத்தால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.
இது தவிர கோவையின் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மேயர் பதவியை எப்படியாவது பெற வேண்டும் என்று ஒருபக்கம் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவையின் மேயர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.