சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஹெல்தி சீஸ் பிஸ்கட்ஸ்

கோதுமை மாவு, சீஸ் வைத்து வீட்டிலேயே அதிரடியாக, டேஸ்ட்டாக ஹெல்தி சீஸ் பிஸ்கட் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. அனைத்து பொருட்களையும் தயாராக வைத்து விட்டால் 20 நிமிடங்களில் தயாரித்து விடலாம்.

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு 200 கிராம், பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், ஏலக்காய் 3, குளிர்ந்த வெண்ணை 25 கிராம், துருவிய சீஸ் கால் கப், பால் முக்கால் கப், எண்ணெய் தேவையான அளவு, மிளகுத்தூள் அரை ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றுடன் உப்பு, பொடித்த சீரகம், சர்க்கரை, பொடி செய்த ஏலக்காய், மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நன்றாக கலந்த பிறகு இதில் குளிர்ந்த வெண்ணை சேர்த்து பிசைந்து விடவும்.

இவற்றுடன் துருவிய சீஸ் சேர்த்து கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக பால் சேர்த்து மென்மையாக பிசைந்து வைக்கவும். மாவை 15 நிமிடங்கள் மூடி போட்டு ஊற வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டையாக தேய்க்கவும்.

குக்கீ கட்டர் மூலம் வட்டங்களாக வெட்டிக் கொள்ளலாம். கட்டர் இல்லாதவர்கள் தேவையான வடிவத்தில் தட்டி எடுத்து வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு பிஸ்கட்டுகளை வைத்து குறைந்த தீயில் இருபுறமும் புரட்டி வைத்து பிஸ்கட் கலர் மாறியதும் பொன்னிறமாக வரும் போது எடுத்து விடவும்.

இதே போன்று எல்லா பிஸ்கட்களையும் பொரித்து எடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். சுவையான சீஸ் பிஸ்கட்ஸ் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *